LATEST NEWS
சர்ச்சை..! இஸ்ரேல் கொடியைக் காட்டிய ரசிகர்கள்… மைதானத்திலேயே எச்சில் துப்பி பதிலடி கொடுத்த எகிப்து கோச்… உலகக் கோப்பையில் பரபரப்பு…!!
அர்ஜென்டினா நாட்டு ரசிகர்கள் இஸ்ரேல் நாட்டின் கொடியைக் காட்டியதைத் தொடர்ந்து, எகிப்து கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் ஹொசாம் ஹாசன் தரையில் எச்சில் துப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகக் கோப்பை கால்பந்து தொடரில் எகிப்து அணி வெளியேறியதைத் தொடர்ந்து, அவர் வீரர்கள் ஓய்வறைக்குச் சென்றபோது இந்த விவகாரம் நிகழ்ந்துள்ளது.
நடப்பு சாம்பியனான அர்ஜென்டினாவுக்கு எதிரான விறுவிறுப்பான போட்டியில் எகிப்து அணி 3-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. போட்டி முடிந்த பிறகு மைதானத்தில் இருந்த அர்ஜென்டினா ரசிகர்கள் சிலர் ஹொசாம் ஹாசனை நோக்கி இஸ்ரேல் கொடியைக் காட்டி தூண்ட முயன்றதாகவும், அதற்குப் பதிலடியாகவே அவர் சில வார்த்தைகளைப் பேசிவிட்டு தரையில் எச்சில் துப்பியதாகவும் கூறப்படுகிறது. ஹொசாம் ஹாசன் நீண்டகாலமாக பாலஸ்தீனத்திற்குத் தனது பகிரங்க ஆதரவைத் தெரிவித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியின் தோல்வி குறித்துப் பேசிய ஹொசாம் ஹாசன், மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் சில காரணிகள் ஆட்டத்தின் முடிவை மாற்றியதாகக் கூறி புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். மேலும், அர்ஜென்டினா அணியும் லியோனல் மெஸ்ஸியும் தொடர்ந்து இத்தொடரில் நீடிக்க வேண்டும் என்று சிலர் விரும்பியதாக அவர் மறைமுகமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
