LATEST NEWS
“2017 பாணியில் மீண்டும் ஒரு ட்விஸ்ட்.. அதிமுகவை ஒன்றிணைக்க தயாராகும் டெல்லி மேலிடம்.. எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் அக்னிப்பரீட்சை.. தமிழக அரசியலில் பரபரப்பு”..!!
தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகத்தின் உட்கட்சிப் பூசல்களும், அதிமுகவை ஒன்றிணைப்பதற்கான டெல்லியின் அரசியல் நகர்வுகளும் தற்போது உற்றுநோக்கப்பட்டு வருகின்றன. தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் நிர்வாகி விராலிமலை விஜயபாஸ்கரின் வருகை எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும், பிரம்மாண்டமாக திட்டமிடப்பட்ட அவரது இணைவு விழாவில் மிகக் குறைந்த அளவிலேயே கூட்டத்தைக் கூட்டியதால் தவெக தலைமை அவர் மீது அதிருப்தியில் உள்ளதாகவும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, தவெகவுக்குள் தற்போது ஆதவ் அர்ஜுன், புஸ்ஸி ஆனந்த் மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோருக்கு இடையே அதிகாரப் போட்டி நிலவுவதாகவும், இதனால் ஆதவ் அர்ஜுன் ஒதுங்கியிருக்க, அமைச்சர் நிர்மல் குமார் மட்டுமே தற்போது முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், கரூரில் கடந்த பொதுத்தேர்தலில் அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த எம்.ஆர். விஜயபாஸ்கரின் தேர்தல் செயல்பாடு மிகச் சிறப்பாக இருந்ததாகவும், அங்கு ஆளுங்கட்சியான திமுக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதாகவும் தராசு ஷ்யாம் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது தவெக ஆளுங்கட்சியாக இருக்கும் சூழலில், வரவிருக்கும் இடைத்தேர்தல்களில் அக்கட்சிக்குச் சில சாதகமான அம்சங்கள் இருக்கும் என்றும் அவர் கணித்துள்ளார். இருப்பினும், அதிமுகவிலிருந்து மூத்த தலைவர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் வெளியேறி தவெகவில் இணைந்து வருவது எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் ரீதியாகப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சூழலில், தமிழக அரசியலில் கூட்டணி மாற்றங்களை உருவாக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமியும், டிடிவி தினகரனும் அடுத்த சில நாட்களில் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கவுள்ளனர். ஒன்றுபட்ட அதிமுக என்பதுதான் எப்போதுமே பாஜகவின் நீண்டகால திட்டமாக இருந்து வரும் நிலையில், டெல்லியின் அழுத்தத்தால் எடப்பாடி பழனிசாமி முன்னிலையிலேயே டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவை மீண்டும் கட்சியில் இணைப்பதற்கான குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. கடந்த 2017-ல் ஓபிஎஸ் – ஈபிஎஸ் அணிகளை டெல்லி ஒன்றிணைத்தது போல, தற்போதைய அமித்ஷாவுடனான சந்திப்புக்குத் பிறகு அதிமுகவின் எதிர்காலத்திலும், தமிழக அரசியல் கூட்டணியிலும் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
