CRIME
திருமணமான நான்கே மாதத்தில் கொடூரம்.. கள்ளகாதலிக்காக மனைவியை கொன்ற கணவன்.. வாட்ஸ்அப் மெசேஜில் சிக்கிய புகைப்படம்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!
தெலங்கானாவைச் சேர்ந்த 30 வயதான மென்பொருள் பொறியாளர் அவினாஷ் நார்னே, வாஷிங்டனின் பெல்லிவியூவில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில், திருமணமாகி நான்கு மாதங்களே ஆன மனைவி ராஜிதா சபினேனியை கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, தனது இறந்த மனைவியின் உடலைப் புகைப்படம் எடுத்து, இந்தியாவில் தன்னுடன் உறவில் இருந்த மற்றொரு பெண்ணுக்கு அவர் அனுப்பியுள்ளார். ஆரம்பத்தில், மனைவி குளியலறையில் தவறுதலாகப் பூட்டிக்கொண்டு சுயநினைவின்றி கிடந்ததாகக் கூறி அவினாஷ் 911 அவசர உதவிக்கு அழைத்திருந்தார்; ஆனால், ராஜிதா கழுத்தை நெரித்ததால் ஏற்பட்ட மூச்சுத்திணறலால் தான் இறந்தார் எனப் பிரேதப் பரிசோதனையில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, இது கொலை வழக்கு என உறுதி செய்யப்பட்டு அவினாஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பறியும் குழுவினரின் அதிரடி விசாரணையில் திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. சம்பவத்தன்று அவினாஷ் இந்தியாவில் உள்ள தன் தோழியுடன் தொடர்ந்து பேசியதையும், மனைவியின் சடலத்தை நிழற்படம் எடுத்து அவருக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பியதையும் வாக்குமூலமாக ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், கடந்த 2025 ஜூன் மாதம் நடந்த இவர்களது திருமணத்திலும் அந்தப் பெண் கலந்து கொண்டுள்ளார். ராஜிதா இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, தன் கணவர் தயாரித்துக் கொடுத்த ஸ்மூத்தி ‘கசப்பாக’ மற்றும் ‘இருமல் மருந்து போல’ இருந்ததாகத் தனது தோழிக்கும் கணவருக்கும் குறுஞ்செய்தி அனுப்பியதும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. ராஜிதாவின் இறுதிச் சடங்கிற்கு உதவிய தெலுங்கு சமூகத்தினர், அவினாஷ் எந்தவித சந்தேகத்திற்கும் இடமளிக்காமல் சடங்குகளை முன்னின்று நடத்தியதாகவும், பின்னர் காவல்துறையின் குற்றச்சாட்டை அறிந்ததும் தாங்கள் அதிர்ச்சியடைந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
