CRIME
நீ எல்லாம் ஒரு பெத்த தாயா…! பிறந்த சில மணி நேரத்திலேயே.. குழந்தையை ஏரியில் வீசிய கொடூரம்… நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!!
விழுப்புரம் மாவட்டம் காணைகுப்பம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் சென்னையில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுதாவிற்கு, அதே ஊரைச் சேர்ந்த யோகலிங்கம் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த ஜூலை 7-ம் தேதி சுதாவிற்கு விழுப்புரம் அரசு மருத்துவமனையில் நான்காவது குழந்தையாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், மருத்துவமனை நிர்வாகத்திற்குத் தெரிவிக்காமல் அன்று இரவே சுதா குழந்தையுடன் திடீரென வெளியேறியதால், சந்தேகமடைந்த மருத்துவமனை ஊழியர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர்.
புகாரைப் பெற்றுக்கொண்ட விழுப்புரம் மேற்கு காவல் துறையினர் மற்றும் அனைத்து மகளிர் காவல் துறையினர் சுதாவிடம் தீவிர விசாரணை நடத்தினர். ஆரம்பத்தில் குழந்தையை ஒருவரிடம் ஒப்படைத்ததாகவும், சுடுகாட்டில் வீசியதாகவும் சுதா முன்னுக்குப் பின் முரணான தகவல்களைக் கூறி போலீசாரை திசை திருப்ப முயன்றார். ஆனால், போலீசார் தங்களது பாணியில் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், கள்ளக்காதலன் யோகலிங்கத்துடன் சேர்ந்து குழந்தையை அகரம் சித்தாமூர் ஏரியில் வீசி கொலை செய்ததை சுதா ஒப்புக்கொண்டார்.
தன் கணவர் சுரேஷ் சென்னையில் இருக்கும் வேளையில், கள்ளக்காதலன் மூலமாகப் பிறந்த இந்தக் குழந்தை குறித்து கணவருக்குத் தெரிந்தால் குடும்பத்தில் பெரிய பிரச்சினை வெடிக்கும் என்ற பயத்திலேயே இந்தக் கொலையைச் செய்ததாக சுதா வாக்குமூலம் அளித்துள்ளார். இந்தத் தகவலின் பேரில் ஏரியில் இருந்து குழந்தையின் உடலை மீட்ட போலீசார், சுதா மற்றும் யோகலிங்கம் ஆகிய இருவரையும் உடனடியாகக் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் இருவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
