LATEST NEWS
கயானா படகு விபத்தில் திடுக்கிடும் திருப்பம்… 27 உயிர்களைப் பலிவாங்கிய கொடூரம்… போதை சோதனையில் மாட்டிக்கொண்ட மாலுமிகள்.. உலகளவில் கிளம்பிய பெரும் பரபரப்பு!
தென் அமெரிக்காவைச் சேர்ந்த கயானாவில், ‘எம்.வி. பாரிமா’ என்ற பயணிகள் படகு கடலில் மூழ்கிய விபத்தில் 27 பேர் உயிரிழந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. ஜார்ஜ்டவுனில் இருந்து புறப்பட்டு போர்ட் கைடூமா நோக்கிப் பயணித்த இப்படகில், அதிகாரப்பூர்வமாக 133 பயணிகள் மட்டுமே பதிவாகியிருந்த நிலையில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக சுமார் 179 பேர் ஏற்றிச் செல்லப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. மீட்புப் படையினரின் தீவிர நடவடிக்கையால் 69 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ள சூழலில், மாயமான எஞ்சிய 83 பேரைத் தேடும் பணிகள் தொடர்ந்து விரைவுபடுத்தப்பட்டு வருகின்றன. விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த கயானா அதிபர் இர்ஃபான் அலி, அவர்களுக்குத் தேவையான முழு அரசு உதவிகளும் உடனடியாக வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து விபத்து தொடர்பான விசாரணையில், படகின் கேப்டன் மற்றும் ஊழியர்கள் கஞ்சா போதையில் இருந்தது மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், படகு முனைய அதிகாரிகள் பயணிகளிடம் ரொக்கப் பணம் பெற்றுக்கொண்டு பயணிகளின் எண்ணிக்கையை முறையாகப் பதிவு செய்யாமல் முறைகேடு செய்ததும் தெரியவந்துள்ளது. ஊழியர்களின் அலட்சியம், போதைப்பொருள் பயன்பாடு மற்றும் பாதுகாப்பு விதிமீறல்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப் பிரதமர் மார்க் பிலிப்ஸ் உத்தரவிட்டுள்ளார். இது கயானா கண்ட மிக மோசமான கடல் பேரிடராகப் பார்க்கப்படுகிறது.
