LATEST NEWS
“அட என்னப்பா சொல்லுறீங்க!.. ஒரு கப் காபிக்கு ₹99 வாடகையா?.. IT எம்ப்ளாயீஸை அலறவிட்ட பெங்களூரு கஃபே.. கொதிக்கும் நெட்டிசன்கள்”..!!
பெங்களூரு இந்திராநகரில் உள்ள ஒரு கஃபே, மடிக்கணினியுடன் பல மணி நேரம் அமர்ந்து வேலை செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ₹99 ‘பணி இட வாடகை’ வசூலிப்பதாக அறிவித்துள்ளது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. கார்த்திக் சுரோஜு என்ற தொழில்நுட்ப நிறுவனர் இந்த அறிவிப்புப் பலகையைப் படம் பிடித்து லிங்க்ட்இனில் பகிர்ந்ததைத் தொடர்ந்து, இந்த செய்தி வைரலானது. ஒரே ஒரு காபியை வாங்கிவிட்டு நீண்ட நேரம் மேசையை ஆக்கிரமிப்பது தங்களின் வணிகத்தைப் பாதிப்பதாக கஃபே உரிமையாளர்கள் தரப்பில் நியாயம் கற்பிக்கப்பட்டாலும், இத்தகைய கட்டணக் கொள்கை வாடிக்கையாளர்களைத் தூர விலக்கிவிடும் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
இந்தியாவின் புனே, கொச்சி போன்ற பிற நகரங்களில் ஏற்கனவே ‘டைம் கஃபே’ எனும் நேரத்தின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கும் புதிய கலாச்சாரம் பரவி வரும் சூழலில், இந்த புதிய விதி இணையவாசிகளிடையே இருவேறு கருத்துக்களை உருவாக்கியுள்ளது. உணவுக்குப் பதிலாக நேரத்திற்கு மட்டும் கட்டணம் வசூலித்து வைஃபை மற்றும் காபியை இலவசமாக வழங்கும் டைம் கஃபேக்களின் போக்கை சிலர் வரவேற்றாலும், சாதாரண உணவகங்களில் இது போன்ற கெடுபிடிகளை விதிப்பதற்குப் பதிலாக “மடிக்கணினி இல்லாத பகுதிகள்” போன்ற மாற்று வழிகளைப் பின்பற்றலாம் எனப் பெரும்பாலானோர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
