LATEST NEWS
“பதிவை நீக்க முடியாது!” மத்திய அமைச்சரின் பிஏ கொடுத்த அழுத்தத்திற்குப் பணிய மறுத்த பாஜக எம்பியின் மகள்… இன்ஸ்டாகிராம் கணக்கு திடீரென முடக்கம்..!!
பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் (MP) அபராஜிதா சாரங்கியின் மகள் அர்ச்சிதா சாரங்கி, நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சையினால் மத்திய கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த தர்மேந்திர பிரதானின் செய்தியைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த செய்திப் பதிவை நீக்குமாறு தர்மேந்திர பிரதானின் தனிச் செயலாளர் (PA) தனது தாயார் மூலம் தனக்கு அழுத்தம் கொடுக்க முயன்றதாக அர்ச்சிதா பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், “முன்பும் இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன; ஆனால் எக்காரணம் கொண்டும் இந்த இன்ஸ்டாகிராம் பதிவை நான் நீக்க மாட்டேன்” என்று அவர் உறுதியுடன் பதிவிட்டது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் நீட் தேர்வு குளறுபடிகளுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய தீவிரப் போராட்டத்தைத் தொடர்ந்து, அதற்கு பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். அர்ச்சிதாவின் இந்த அதிரடிப் பதிவிற்குப் பிறகு, அவரது இன்ஸ்டாகிராம் கணக்கு திடீரென முடக்கப்பட்டுள்ளது (Deactivated) சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், அவரது தாயாரும் புவனேஷ்வர் தொகுதி பாஜக எம்பியுமான அபராஜிதா சாரங்கி, தர்மேந்திர பிரதானின் இந்த ராஜினாமாவை ஒரு சிறந்த தார்மீகக் கடமை எனப் பாராட்டி, அவருக்குத் தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
இந்த மாணவர் போராட்டத்தை முன்னெடுத்த ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP), தற்கொலை செய்துகொண்ட நீட் தேர்வர்களின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தது. மத்திய அரசு தங்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்டதாக சனிக்கிழமை மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மத்திய அமைச்சர்களுடன் இணைந்து அறிவித்த சி.ஜே.பி அமைப்பு, தங்களது தொடர் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டதாக அறிவித்துள்ளது.
