LATEST NEWS
“என்னை பெத்தவங்க அப்படி வளர்க்கல” எல்லா பெண்களையும் அக்கா, தங்கையா பாக்குறேன்… கைது விடுதலைக்கு பின் உதயநிதி ஸ்டாலின் உருக்கம்..!!
விவசாயிகளுக்கு ஆதரவாகவே குரல் கொடுத்ததாகவும், யாரிடமும் தவறான எண்ணத்திலோ அல்லது இரட்டை அர்த்தத்திலோ பேசவில்லை என்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தன்நிலை விளக்கம் அளித்துள்ளார். தஞ்சையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில், முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறி, இன்று காலை தஞ்சை போலீசாரால் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். சென்னையில் கைது செய்யப்பட்டு சாலை மார்க்கமாக தஞ்சை செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், ஒன்றரை மணி நேர விசாரணைக்குப் பின் விடுவிக்கப்பட்டு சென்னை திரும்புவதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சிக் காலத்தில் மேட்டூர் அணையில் இருந்து தொடர்ச்சியாகத் தண்ணீர் திறந்து விடப்பட்டதைச் சுட்டிக்காட்டினார். ஆனால், ஐந்து வருடங்களுக்குப் பிறகு இந்த ஆண்டு தற்போது வரை டெல்டா பாசனத்திற்குத் தண்ணீர் திறக்கப்படவில்லை என்றும், கர்நாடக அரசிடம் இருந்து காவிரி நீரைப் போராடிப் பெறும் தைரியம் தவெக அரசுக்கு இல்லை என்றும் சாடினார்.
மேலும், தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் தான் பேசாத ஒரு விஷயத்தை எடிட் செய்து தவறாக இணைத்து பரப்பியதாகத் தெரிவித்த உதயநிதி, தான் முழுக்க முழுக்க விவசாயிகளின் நலனுக்காக மட்டுமே பேசியதாக விளக்கமளித்தார். யாரையும் தாழ்த்திப் பேசும் எண்ணமோ, பெண்களைப் புண்படுத்தும் நோக்கமோ தனக்கு இல்லை என்றும், தன் பெற்றோர் மற்றும் குடும்பம் தன்னை அப்படி வளர்க்கவில்லை என்றும் கூறினார். தனக்கு மனைவி, பெண் குழந்தை, தங்கை என ஒரு குடும்பம் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் தனது சொந்தத் தாய், தந்தையாகவே பார்த்துப் பேசுவதாகத் தெரிவித்தார்.
இன்று கூடும் சட்டமன்றத்தில் மேகதாது அணை விவகாரம் குறித்துப் பேசிவிடக் கூடாது என்பதாற்காகவே, இந்த விவகாரத்தைப் பெரிய அளவில் ஊதிப் பெருக்கியுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். தான் பேசாத ஒரு விஷயத்தை தேசிய ஊடகங்கள் வரை கொண்டு சென்று, தேவையில்லாத சர்ச்சையை உருவாக்கி திசைதிருப்பப் பார்க்கிறார்கள் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
