CINEMA
மாணவர்களுக்கு தாய்மொழி தெரியாதது அவமானம்.. தமிழை கற்க வேண்டும்… நடிகர் தனுஷ் வேதனை…!!
நடிகர் தனுஷ் சென்னை தியாகராய நகரிலுள்ள தனது பழைய பள்ளியான தாய் சத்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் புதிய 3 மாடி கட்டடத்தைத் திறந்து வைத்து மாணவர்களிடையே உரையாற்றினார். அப்போது, தற்காலத்தில் தான் சந்திக்கும் 10 பேரில் 8 பேருக்குத் தமிழ் எழுதவோ, படிக்கவோ தெரியவில்லை என்றும், அனைவரும் ஆங்கிலம் மட்டுமே பேசுவதாகவும் அவர் மிகுந்த கவலை தெரிவித்தார். தாய்மொழி தெரியாமல் இருப்பது பெருமைப்படத்தக்க விஷயம் அல்ல, அது ஒரு அவமானம் என்று அவர் மாணவர்களிடம் திட்டவட்டமாகக் கூறினார்.
தன்னுடைய பிரெஞ்சு படப்பிடிப்பிற்காகப் பெல்ஜியம் சென்றிருந்த போது நடந்த ஒரு சம்பவத்தையும் அவர் மேடையில் பகிர்ந்துகொண்டார். அங்குள்ள மக்களிடம் ஆங்கிலம் தெரியுமா எனக் கேட்டபோது, அவர்கள் ஆச்சரியமடைந்து தனுஷிடம் உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா எனக் கேட்டுள்ளனர். பொதுவாக ஆங்கிலம் தெரியாதவர்களைத் தான் கேலி செய்வார்கள், ஆனால் பெல்ஜிய மக்கள் “தாய்மொழி மட்டுமே முக்கியம், ஆங்கிலம் என்பது வெறும் கூடுதல் தகுதி ” என்று கூறியதை தனுஷ் சுட்டிக்காட்டினார்.
தனுஷின் இந்தத் தாய்மொழி குறித்த பேச்சு, தமிழகத்தில் மீண்டும் மொழி சார்ந்த விவாதங்களை தீவிரப்படுத்தியுள்ளது. மேலும், அவர் பள்ளியின் புதிய கட்டட சீரமைப்புப் பணிகளுக்கு நிதியுதவி செய்ததால், அந்த வளாகத்திற்குப் பள்ளியின் நிர்வாகம் ‘தனுஷ் பிளாக்’ எனப் பெயரிட்டுள்ளது. அதே வேளையில், தனுஷின் இந்தத் திடீர் பொது மேடைப் பேச்சு அவர் அரசியல் களத்தில் இறங்குவதற்கான முதற்படியா என்ற யூகங்களையும் கிளப்பியுள்ளது.
