LATEST NEWS
“எங்களோட அமைதியை அசால்ட்டா நினைக்காதீங்க..! நீர் உரிமைக்கு ஆபத்து வந்தால் சும்மா விடமாட்டோம்..!” இந்தியாவுக்கு பாகிஸ்தான் விடுத்த ஓபன் வார்னிங்..!!
பாகிஸ்தானின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் நீர் உரிமைகளுக்கு ஆபத்து நேர்ந்தால், மே 2025 இல் கொடுத்ததை விட பலமான பதிலடியை கொடுப்போம் என இந்தியாவிற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியா ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது போல, பாகிஸ்தான் இன்று தனது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது.
கடந்த ஆண்டு ஏப்ரலில் பஹல்காமில் 26 பேர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பதிலடியாக இந்தியா மே 7 அன்று ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது. 2 நாட்கள் நீடித்த இந்த மோதல் மே 9 அன்று முடிவுக்கு வந்தது. இந்நிலையில் நேற்று தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடந்த ஆண்டு இந்தியாவுடன் நிகழ்ந்த மோதல் மற்றும் அதில் சண்டையிட்ட பாகிஸ்தான் வீரர்களுக்கான ‘யாதிர்-ஐ-பதா’ திறந்து வைக்கும் நிகழ்வில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி, பீல்ட் மார்ஷல் அசிம் முனீர் மற்றும் முப்படை தளபதிகள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் ஷெரீப், “பாகிஸ்தான் அமைதியை விரும்புகிறது; ஆனால் அமைதியை விரும்புவதை பலவீனமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. பாகிஸ்தானின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் நீர் உரிமைகளுக்கு ஆபத்து நேர்ந்தால், மே 2025-இல் கொடுத்ததை விட பலமான பதிலடியை கொடுப்போம்” என எச்சரித்துள்ளார். பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்திய இந்தியா, ஜம்மு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் செல்லும் நீரை கணிசமாகக் குறைத்துள்ள சூழலில், பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியாவுக்கு இவ்வாறு மிரட்டல் விடுத்து வருகிறது.
