LATEST NEWS
அண்ணன் செத்தா என்ன… தம்பி செத்தா என்ன… எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்ல..! 3 நாட்களாகக் காத்திருந்த காவல்துறையை அதிரவைத்த உறவினர்களின் பதில்… ஒரே சிதையில் எறிந்த 3 உடல்கள்… கண்ணீரில் மூழ்கிய காசி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள லக்ஸா காவல் நிலையப் பகுதியில், ஆகஸ்ட் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் ஒரு ஹோம்ஸ்டேயில் முகர்ஜி குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் ராய்காட்டில் இருந்து ஆகஸ்ட் 7-ஆம் தேதி வாரணாசி வந்தடைந்த 55 வயதான விஷால் முகர்ஜி, அவரது 52 வயதான மனைவி ஜெயா முகர்ஜி மற்றும் 27 வயதான மகன் இஷான் முகர்ஜி ஆகியோர் வாச்சி விருந்தினர் இல்லத்தில் தங்கியிருந்தனர். மகனின் கடன் சுமை மற்றும் மனைவியின் மோசமான உடல்நிலை காரணமான சிகிச்சைச் செலவுகளால் அவர்கள் அவதியுற்று வந்த நிலையில், ஆகஸ்ட் 9 அன்று விஷால் முகர்ஜி BHU மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மறுநாளான ஆகஸ்ட் 10 அன்று, தாயும் மகனும் தங்கியிருந்த அறையிலேயே விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.
இறந்தவர்களின் உடல்களைப் பெற்றுக்கொள்ள லக்ஸா காவல்துறையினர் மூன்று நாட்கள் காத்திருந்தும், உறவினர்கள் யாரும் வர முன்வரவில்லை. பிரயாக்ராஜில் வசிக்கும் விஷால் முகர்ஜியின் சகோதரி, பேராசிரியர்கள் மற்றும் அரசு அதிகாரிகளாக இருக்கும் பல உறவினர்களைக் காவல்துறை தொடர்புகொண்ட போதிலும், அவர்கள் அனைவரும் தங்களுக்கு இதில் எந்தத் தொடர்பும் இல்லை என்று மறுத்துவிட்டனர். கர்னல்கஞ்சில் வசிக்கும் சகோதரி, தனது சகோதரர் மற்றும் சகோதரியுடனான உறவு 12 ஆண்டுகளுக்கு முன்பே முடிந்துவிட்டதாகவும், உறவினர்களின் வற்புறுத்தலால் ஒதுங்கியிருப்பதாகவும் தொலைபேசியில் கூறி வர மறுத்துவிட்டார்.
மூன்று நாட்களுக்குப் பிறகு, கடந்த வெள்ளிக்கிழமை ஹரிச்சந்திர காட்டில் முகர்ஜி குடும்பத்தினரின் உடல்கள் லக்ஸா காவல்துறையின் மேற்பார்வையில் தகனம் செய்யப்பட்டன. அமன் கபீர் அறக்கட்டளை என்ற சமூக சேவை அமைப்பின் சார்பாக அமன் கபீர் இறுதிச் சடங்குகளை முன்னின்று நடத்தினார். ஒரே சிதையில் மூன்று உடல்களும் ஒன்றாகத் தகனம் செய்யப்பட்ட நிகழ்வு அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. உறவினர்கள் பலர் உயர்பதவிகளிலும் நல்ல நிலையிலும் இருந்தும், முகர்ஜி குடும்பத்தினர் வாழ்நாளிலும் மரணத்திற்குப் பிறகும் தங்கள் அன்புக்குரியவர்களின் ஆதரவின்றி ஏங்கியது மிகவும் வேதனையான ஒன்று என மக்கள் தெரிவித்தனர்.
