LATEST NEWS
நேத்து நைட்டு 10 மணிக்குத்தான் வந்துச்சு.. நைட்டு புல்லா தூங்கவே இல்ல… விடியக்காலை 5.30 மணிக்கு… பேரவையில் தனது ஆதங்கத்தை கொட்டிய செந்தில் பாலாஜி.. பதிலடி கொடுத்த சபாநாயகர்…!!
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விவாதத்தின் போது, முன்னாள் அமைச்சரும் தற்போதைய தி.மு.க சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி, மானியக் கோரிக்கை தொடர்பான ஆவணங்கள் மற்றும் கொள்கை விளக்கக் குறிப்புகள் தங்களுக்கு மிகவும் தாமதமாக வழங்கப்படுவதாக அவையில் தனது கடுமையான ஆதங்கத்தைப் பதிவு செய்தார். “மானியக் கோரிக்கை விவாதப் புத்தகங்கள் நேத்து நைட்டு 10 மணிக்கு தான் எங்க கைக்கு வந்துச்சு. மொத்தம் ஆறு துறைகள் சார்ந்த புத்தகங்கள் இருந்ததால், அவை அனைத்தையும் படித்துத் தயார் செய்வதற்குள் நைட்டு தூங்கவே இல்லை. நான் தூங்கப் போகும் போது மணி மூன்றரை, மீண்டும் விடியற்காலை ஐந்து முப்பதுக்கே எழுந்து படிக்கத் தொடங்கிவிட்டேன்” என்று தன் தூக்கமில்லா இரவை விவரித்து அவர் ஆதங்கப்பட்டார்.
எம்.எல்.ஏ-க்கள் படித்துவிட்டு வந்து அவையில் ஆக்கப்பூர்வமான விவாதங்களை முன்வைக்க வேண்டுமானால், துறை சார்ந்த கொள்கை விளக்கக் குறிப்புகளை ஒரு நாள் முன்னதாகவே வழங்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார். இதற்கு அவையில் இருந்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் ஆதரவு தெரிவித்து, தங்கள் ஆட்சிக் காலத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பே ஆவணங்களைக் கொடுத்ததைச் சுட்டிக்காட்டினார். உறுப்பினர்கள் படித்தால் தான் அரசு கொண்டு வரும் சீரிய திட்டங்களை மக்களிடம் முழுமையாகக் கொண்டு சேர்க்க முடியும் என்பதால், ஆவணங்களை முன்கூட்டியே வழங்க அரசுத் துறைகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறு சபாநாயகரும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
