LATEST NEWS
“டாக்டர் எங்கே..?” நள்ளிரவில் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து… பெண் செவிலியரின் கன்னத்தில் ஓங்கி அறைந்த ஆசாமி…! குஜராத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…!!
குஜராத்தின் சுரேந்திரநகர் மாவட்டத்தில் உள்ள லிம்ப்டி அரசு மருத்துவமனையில், இரவு ஷிஃப்ட்டில் பணியில் இருந்த செவிலியரை நபர் ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 15-ஆம் தேதி அதிகாலையில் இச்சம்பவம் நடந்துள்ளது. மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் அத்துமீறி நுழைந்த திவ்யராஜ் சிங் கஜேந்திரசிங் ராணா என்ற நபர், மருத்துவர் எங்கே என்று கேட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அங்கு பணியில் இருந்த 26 வயதான உன்னதிபென் கனுபாய் சோலான்கி என்ற செவிலியர் தனது தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது, அதைக் கண்டு ஆத்திரமடைந்த அந்த நபர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இணையத்தில் வெளியாகி வைரலான சிசிடிவி காட்சியில், அந்த நபர் திடீரென செவிலியரின் முகத்தில் ஓங்கி அறைவது பதிவாகியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், தனக்கு உதவி கேட்டு மற்ற மருத்துவமனை ஊழியர்களை நோக்கி பயத்துடன் ஓடித் தப்பியுள்ளார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தது. பாதிக்கப்பட்ட செவிலியர் அளித்த புகார் மற்றும் சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில், லிம்ப்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்ட திவ்யராஜ் சிங் ராணாவைக் கைது செய்து காவலில் எடுத்தனர். சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறையினரின் பாதுகாப்பு குறித்த கவலையை இந்தச் சம்பவம் மீண்டும் எழுப்பியுள்ளது.
