LATEST NEWS
“என் உயிர் போனாலும் பரவாயில்ல.. என் மகனைக் காப்பாத்துங்க..! சாக்கடையில் இறங்கி அழுது கதறியபடி தேடிய தந்தை… 4 நாள் தேடுதலுக்குப் பின் சிறுவன் சடலமாக மீட்பு..! நெஞ்சை உலுக்கும் சோகக் காட்சி..!!
டெல்லியில் சனிக்கிழமை காலை பட்டம் துரத்திச் சென்ற 15 வயது சிறுவன் மிதுன், திறந்த நிலையில் இருந்த சாக்கடை வடிகாலில் விழுந்து காணாமல் போனான். இத்தகவல் அறிந்ததும் டெல்லி காவல்துறை, தீயணைப்புப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் போட் கிளப் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மகன் சாக்கடையில் விழுந்துவிட்டதை அறிந்த தந்தை அவதேஷ் குமார், தன் உயிரையும் பொருட்படுத்தாமல் மகனைத் தேடித் தானே அந்த ஆபத்தான வடிகாலுக்குள் இறங்கினார்.
தந்தை கதறியபடி சாக்கடைக்குள் இறங்கித் தேடும் நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சி வெளியாகி அனைவரையும் கலங்க வைத்தது. “என் மகன் எப்படி விழுந்தான் எனத் தெரியவில்லை, ஆனால் அந்த வடிகால் எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் திறந்து கிடந்தது” என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார். நான்கு நாட்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தீவிரத் தேடுதல் நடவடிக்கையின் முடிவில், புதன்கிழமை மதியம் 1.15 மணியளவில் மூழ்காளர்கள் சிறுவன் மிதுனின் சடலத்தை வடிகாலில் இருந்து மீட்டனர். அதன்பின் சிறுவனின் உடல் உடற்கூறாய்வு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சாக்கடை வடிகாலை மூடாமல் திறந்த வெளியில் விட்டு அலட்சியமாகப் பணியாற்றிய குற்றத்திற்காக, தென்கிழக்கு மண்டலத்தைச் சேர்ந்த டெல்லி மாநகராட்சி இளநிலை பொறியாளர் ஒருவரை அதிகாரிகள் உடனடியாக இடைநீக்கம் செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். திறந்தநிலையில் இருக்கும் வடிகால்கள் மற்றும் சாக்கடைகளால் ஏற்படும் ஆபத்துகளை இச்சம்பவம் தோலுரித்துக் காட்டியுள்ளது. இனிமேலாவது அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்துப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
