CRIME
“அய்யோ என் மனைவி கீழே விழுந்து இறந்துட்டாங்க..” 108 ஆம்புலன்ஸை வரவழைத்து கண்ணீருடன் கணவன் ஆடிய பயங்கர நாடகம்.. ஊழியர்கள் கண்டுபிடித்த அந்த ஒரு ‘ரகசியம்’.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
சென்னை கொளத்தூர் அன்னை சத்யா நகர் பகுதியில், குடும்பத் தகராறில் மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு, அவர் கீழே விழுந்து இறந்துவிட்டதாக நாடகமாடிய கணவனைப் போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கூலித் தொழிலாளியான சரண்ராஜ் (36) என்பவர், ஏற்கனவே திருமணமான முத்துமாரியம்மாள் (38) என்ற பெண்ணைக் காதலித்து இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டுள்ளார். கடந்த சில மாதங்களாகச் சரண்ராஜ் வேலைக்குச் செல்லாமல் முழு நேர மது போதைக்கு அடிமையானதால், தம்பதியினருக்கு இடையே அடிக்கடி கடுமையான சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று இரவும் போதையில் வந்த சரண்ராஜ் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஆத்திரத்தில் வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியால் முத்துமாரியம்மாளின் மார்பில் சரமாரியாகக் குத்தியதில், அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தார்.
கொலைக்குப் பின் எதையும் அறியாதவர் போலச் சரண்ராஜ் 108 ஆம்புலன்ஸை வரவழைத்து, தனது மனைவி நிலைதடுமாறி கீழே விழுந்துதான் இறந்துவிட்டார் எனச் செவிலியர்களிடம் நம்ப வைக்க முயன்றுள்ளார். ஆனால், பெண்ணின் உடலில் இருந்த கத்திக் குத்துக் காயங்களைக் கண்டு சந்தேகமடைந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உடனடியாக கொளத்தூர் காவல் நிலையத்திற்கு ரகசியத் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீஸார் சடலத்தைக் கைப்பற்றிக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்ததோடு, நாடகமாடிய கொலையாளி சரண்ராஜை மடக்கிப் பிடித்துக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
