LATEST NEWS
வீட்டை உடனே காலி பண்ணு..!” வங்கி ஏஜென்ட்களின் அழுத்தத்தால் பரிதாபமாக பறிபோன உயிர்..! கதறித் துடிக்கும் குடும்பம்…!!
லக்னோவின் சகாதத்கஞ்ச் காவல் எல்லைக்குட்பட்ட ராம்நகர் பகுதியைச் சேர்ந்த 55 வயதான அப்ரார் அலி என்பவர் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து ஈரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். வங்கியின் நிலுவைத் தொகை வசூலிக்கும் முகவர் தொடர்ந்து அச்சுறுத்தி வந்ததாகவும், வீட்டை உடனடியாகக் காலி செய்யும்படி அழுத்தம் கொடுத்ததாலும்தான் அப்ரார் அலி கடும் மன உளைச்சலுக்கு ஆளானார் என்று அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். வீட்டின் வெளியே முகவர் நோட்டீஸ் ஒட்டிய பிறகே அவரது உடல்நிலை மோசமடைந்து மாரடைப்பு ஏற்பட்டதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
குடும்பத்தினரின் கூற்றுப்படி, நான்கு நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்த வங்கியின் வசூல் முகவர், வீட்டின் சுவரில் நோட்டீஸை ஒட்டி வீட்டை காலி செய்யுமாறு கூறியுள்ளார். அதன் பிறகு அப்ரார் அலி கடும் மன அழுத்தத்தில் இருந்தார் என்றும், வங்கித் தரப்பில் இருந்து தொடர்ந்து அழைப்புகள் வந்து கொண்டிருந்ததாகவும் அவரது மனைவி அப்சா தெரிவித்துள்ளார். மேலும், கடனைத் தீர்க்க சுமார் ரூ.31 லட்சம் வரை செலுத்துமாறு வங்கி தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அப்ரார் அலி வங்கியில் ரூ.24 லட்சம் கடன் வாங்கியிருந்ததாகவும், அதில் சுமார் ரூ.16 லட்சத்தை ஏற்கனவே திருப்பிச் செலுத்திவிட்டதாகவும் குடும்பத்தினர் கூறுகின்றனர்.
குடும்பத்தின் ஒரே ஆதரவாகவும் வருமானம் ஈட்டுபவராகவும் இருந்த அப்ரார் அலி, பிக்கப் வாகனம் ஓட்டி குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். கடந்த 9 மாதங்களுக்கு முன்பும் வங்கி நிலுவைத் தொகை தொடர்பாகக் கொடுக்கப்பட்ட அழுத்தத்தால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, திறந்த இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. வங்கியிடம் கடன் கணக்கு விவரங்களைக் கேட்டும் அவர்கள் சரியாகக் வழங்கவில்லை என்று அவரது மருமகன் குற்றம் சாட்டியுள்ளார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அப்ரார் அலினுடைய குடும்பத்தினர் வங்கி முகவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளிக்க முடிவு செய்துள்ளனர். அதே சமயம், காவல்துறை இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
