LATEST NEWS
“சாதி வெறியின் உச்சக்கட்டம்..” காதலித்துத் திருமணம் செய்த பிராமணப் பெண்.. மகள் உயிரோடு இருக்கும்போதே காரியம் செய்த பெற்றோர்.. இணையத்தில் வைரலாகும் சம்பவம்..!!
பீகார் மாநிலம் பூர்ணியா பகுதியில், பிராமண சமூகத்தைச் சேர்ந்த ரியா என்ற பெண், தனது வீட்டிற்கு அருகிலேயே வசிக்கும் பாஸ்வான் சமூகத்தைச் சேர்ந்த வாலிபரைத் தீவிரமாகக் காதலித்துக் திருமணம் செய்துகொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் குடும்பத்தினர், மகள் உயிரோடு இருக்கும்போதே அவர் இறந்துவிட்டதாகக் கருதி, அவருக்குரிய ஈமச்சடங்குகளைச் (இறுதிச்சடங்கு) செய்து முடித்ததுடன் ஒட்டுமொத்த கிராமத்திற்கும் ‘மரண விருந்து’ வைத்துள்ள விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. பெற்றோர் ஜாதியைப் பார்த்தார்களே தவிர தன் மகிழ்ச்சியைப் பார்க்கவில்லை என்று கூறியுள்ள ரியா, “அவர்களின் விருப்பப்படி நான் வேறொருவரைத் திருமணம் செய்திருந்தால், அந்தப் பையன், என்னைக் காதலித்த பையன் மற்றும் என்னுடைய வாழ்க்கை என மூன்று பேரின் வாழ்க்கையும் பாழாகியிருக்கும்” எனத் தனது தரப்பு நியாயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், “அவர்கள் என்னை ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கருதிவிட்டதால், எனக்கும் இப்போது என் பெற்றோர்கள் இறந்துவிட்டதாகவே அர்த்தம்; இனிமேல் என் கணவரும், அவரது குடும்பத்தினரும்தான் என் மக்கள்” என்று ரியா உருக்கமாகத் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், இந்த விவகாரம் குறித்துப் பேசிய ரியாவின் தந்தை, “எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் கைகளால் தொட்டால் நாங்கள் தண்ணீர் கூடக் குடிக்க மாட்டோமோ, அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவரை என் மகள் திருமணம் செய்துகொண்டுள்ளார்; இதுவே வேறு ஜாதியாக இருந்திருந்தால் எங்களுக்கு இந்த அளவிற்குப் பெரிய வலி இருந்திருக்காது” எனத் தனது கடுமையான ஜாதிய வன்மத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஜாதியக் கொடுமையின் உச்சமாக அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
