CRIME
அய்யோ கடவுளே.. பணத்துக்காக இப்படியா பண்ணுவாங்க..? பக்கத்து வீட்டு சிறுவனை கடத்தி கொன்ற M.Tech பட்டதாரி… பின்னணியில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அண்டை வீட்டுச் சிறுவனை கடத்திப் படுகொலை செய்த வழக்கில் அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிக்ஜாலா காவல் துறையினர் இந்தச் சம்பவம் தொடர்பாக வாக்கா பாஸ்கர் ரெட்டி மற்றும் கொண்டலா ரெட்டி ஆகிய இருவரைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பாஸ்கர் ரெட்டியிடம் நடத்திய விசாரணையில், சிறுவனைக் கொன்ற பிறகே அவனது பெற்றோரிடம் கப்பத்தொகை கேட்கத் திட்டமிட்டது தெரியவந்தது. பிரஜ்வல் என்ற அந்தச் சிறுவனைக் கடத்துவதற்கு முன்பே, அவன் அழுவது போன்றும், தன்னைக் கடத்திவிட்டதாகவும் பணத்தைக் கொடுத்துக் காப்பாற்றுமாறும் பேசும் இரண்டு வீடியோக்களை குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் பதிவு செய்துள்ளனர். அதன்பிறகு, உடனடியாகச் சிறுவனைக் கொலை செய்து உடலை மறைத்துவிட்டு, பெற்றோருக்கு அந்த வீடியோக்களை அனுப்பிப் பணம் பறிக்கத் திட்டமிட்டிருந்தனர்.
கொலையாளி பாஸ்கர் ரெட்டி இங்கிலாந்தில் எம்.டெக் படிப்பை முடித்துவிட்டுச் சமீபத்தில்தான் இந்தியா திரும்பியுள்ளார். ஆன்லைன் கேமிங் மற்றும் சூதாட்டப் பழக்கத்திற்கு அடிமையானதால் அவருக்கு பல லட்சம் ரூபாய் கடன் ஏற்பட்டது. அந்தக் கடனை அடைக்கவும், குறுக்கு வழியில் விரைவாகப் பணம் சம்பாதிக்கவும் திட்டமிட்ட பாஸ்கர், பக்கத்து வீட்டில் வசித்து வந்த சிறுவன் பிரஜ்வலை இலக்காகத் தேர்ந்தெடுத்து கடத்தத் திட்டமிட்டுள்ளார். காவல் துறையினரின் பார்வையில் படாமல் இருக்க, போலி ஆவணங்கள் மூலம் போலி சிம் கார்டு ஒன்றையும் அவர் வாங்கியுள்ளார். அதோடு, சிறுவனைக் கொன்ற பிறகும் ஏதும் தெரியாதது போலக் குடும்பத்தினருடன் சேர்ந்து சிறுவனைத் தேடுவது போல் நாடகமாடியுள்ளார்.
சம்பவத்தன்று சிறுவனை ஆசைகாட்டி அழைத்துச் சென்ற பாஸ்கர், உடனடியாக அவனைக் கொலை செய்துள்ளார். சிறுவனை உயிருடன் விட்டால் தன்னை அடையாளம் காட்டிவிடுவான் என்ற பயத்தினாலேயே, கடத்தலுக்குப் பிறகும் பணம் கேட்பதற்கு முன்பே அவனைக் கொலை செய்யத் துணிந்துள்ளார். கொலை செய்துவிட்டே வீடியோக்களை அனுப்பிப் பெற்றோரிடம் கப்பத்தொகை கேட்க பாஸ்கரும் அவனது கூட்டாளியும் முயன்றுள்ளனர். தற்போது காவல் துறையினர் கைது செய்யப்பட்ட இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
