LATEST NEWS
அதிமுகவில் அடுத்தடுத்த க்ளைமாக்ஸ்..! 100 பேர் நீக்கப்பட்ட நிலையில் EPS-ஐ நேரில் சந்தித்த சி.வி.சண்முகம் ஆதரவு MLA.. ஓங்கிப் அடிக்கும் உட்கட்சிப் புயல்..!
அதிமுகவில் உட்கட்சிப் பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதாகக் கூறி ஒரே நாளில் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை, தமிழக அரசியல் களத்திலும் குறிப்பாக விழுப்புரம், கடலூர் மாவட்ட அஇஅதிமுக வட்டாரங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், சி.வி.சண்முகத்தின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்ட பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே. மோகன், சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரைச் சந்தித்துப் பேசியுள்ளது அரசியல் வட்டாரங்களில் மிக முக்கியப் பேசுபொருளாக மாறியுள்ளது. சி.வி.சண்முகம் தரப்பு நிர்வாகிகள் கூண்டோடு நீக்கப்பட்ட அடுத்த கணமே நிகழ்ந்துள்ள இந்தச் சந்திப்பு, அதிமுகவிற்குள் நிலவும் அடுத்தகட்ட அதிகார நகர்வுகளைத் தெளிவாகப் பிரதிபலிக்கிறது.
இந்தச் சந்திப்பிற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பண்ருட்டி எம்.எல்.ஏ மோகன், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தற்பொழுது இளைஞர்களுக்குச் சார்பு அணிகளில் தொடர்ந்து முக்கியப் பதவிகளையும் வாய்ப்புகளையும் வழங்கி வருவதாகப் பாராட்டினார். மேலும், தாங்கள் என்றும் தலைமைக்குக் கட்டுப்பட்டு, அவரது கட்டளையை முழுமையாக ஏற்றுச் செயலாற்றத் தயாராக உள்ளோம் எனக் கூறி இபிஎஸ்-ன் தலைமைக்குத் தனது முழு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
