CRIME
நெஞ்சே பதறுது..! பழைய பகையால் வெறிச்செயல்.. காரின் மீது கட்டித் தொங்கவிட்டு ஒன்றரை கிலோமீட்டர் இழுத்துச் சென்று கொடூரக் கொலை..! சினிமாவை மிஞ்சிய நிஜ சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் தசரா திருவிழாவைப் பார்த்துவிட்டு வீடு திரும்பிய பீரு சிங் பதௌரியா என்ற இளைஞர் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடந்த இந்தச் சம்பவத்தில், பழைய பகை காரணமாக ராஜவீர் மற்றும் மேவாலால் உள்ளிட்ட நபர்கள் பீரு சிங்கை வழிமறித்துத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. உயிருக்கு பயந்து தப்பியோட முயன்ற அவரை மர்ம நபர்கள் காரால் மோதி விபத்துக்குள்ளாக்கினர்.
இதனைத் தொடர்ந்து, அந்த இளைஞரை காரின் மீது ஏற்றி அமரவைத்து, அவரது இரு கைகளையும் காரின் ஜன்னல் கண்ணாடிகளுக்குள் மாட்டி கதவுகளை மூடியுள்ளனர். இந்த கோரமான நிலையில் காரை வேகமாக இயக்கி, அவரை சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் வரை இழுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. பின்னர் ராஜேந்திர நகர் பகுதியில் அவரை சாலையில் கீழே தள்ளிவிட்டு, கார் மூலம் அவர் மீது ஏற்றி கொடூரமாகக் கொன்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் உள்ள பல சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பீரு சிங்கை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து உயிரிழந்தவரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர், மேலும் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
