CRIME
“நெல்லையில் நடுநடுங்க வைக்கும் சம்பவம்…” செல்போன் பேசியபடி பெட்ரோல் போட்ட மாணவர்.. ஆத்திரத்தில் பங்க் ஊழியரை சரமாரியாக வெட்டிய கும்பல்..! நள்ளிரவில் நடந்த பயங்கரம்..!!
நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள கீழ ஏர்மாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் அருணாசலம். இவருடைய மகன் துரைராம் (வயது 20). இவர் அம்பையில் உள்ள கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் இவர் பகுதி நேரமாக, அம்பை – பாபநாசம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்க்கில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவில் துரைராம் பணியில் இருந்தபோது, அவருக்கு அறிமுகமான சுப்பிரமணியபுரம் பொத்தையைச் சேர்ந்த வேல்முருகன் (18) என்பவருக்கு மோட்டார் சைக்கிளில் ரூ.50-க்கு பெட்ரோல் போட முயன்றார். அப்போது துரைராமின் செல்போனுக்கு அழைப்பு வர, அவர் போனில் பேசியபடியே பெட்ரோல் போட்டதாகக் கூறப்படுகிறது.
செல்போனில் பேசியபடி பெட்ரோல் போட்டதை வேல்முருகன் கண்டித்து அவதூறாகப் பேசியதால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கிருந்து ஆவேசமாகச் சென்ற வேல்முருகன், சிறிது நேரத்தில் தனது நண்பர்களான சதீஷ் மற்றும் கார்த்திகேய ராஜன் (18) ஆகியோருடன் மீண்டும் பெட்ரோல் பங்க்கிற்கு வந்தார். அவர்கள் 3 பேரும் சேர்ந்து துரைராமை சரமாரியாகத் தாக்கியதுடன், சதீஷ் மறைத்து வைத்திருந்த அரிவாளால் துரைராமை வெட்டினார். மேலும் பெட்ரோல் பங்க்கில் இருந்த பூந்தொட்டி, கார்டு பேமெண்ட் மிஷின் உள்ளிட்ட பொருட்களையும் அடித்து நொறுக்கி சூறையாடிவிட்டுத் தப்பிச் சென்றனர். இதில் தலையில் காயமடைந்த துரைராம் அம்பை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், அம்பை போலீசார் வழக்குப் பதிவு செய்து வேல்முருகன் மற்றும் கார்த்திகேய ராஜன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சதீசை போலீசார் தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர். பெட்ரோல் பங்க்கில் செல்போனில் பேசியபடி பெட்ரோல் போட்ட கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு விழுந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
