CRIME
நம்பி வேலைக்கு வச்சா இப்படி பண்ணிட்டாளே..” ரயிலை விட்டுட்டு பஸ்ஸில் பயணம்.. போலிஸை திசைதிருப்பிய ‘லேடி மாஸ்டர்மைண்ட்’..! சிசிடிவியில் அம்பலமான பகீர் திருட்டு..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டின் டிஃபென்ஸ் காலனியைச் சேர்ந்த பிரபல விளையாட்டுப் பொருட்கள் தொழிலதிபர் அஷுதோஷ் பல்லாவின் மாளிகையில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் நகைகள் திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரியைச் சேர்ந்த பணிப்பெண் ரோஷ்னி, தொழிலதிபரின் தாயாருக்கு போதை மருந்து கலந்த தேநீரைக் கொடுத்து மயங்கச் செய்துள்ளார். அவர் மயங்கிய பிறகு, பாதுகாப்புப் பெட்டகத்தில் இருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டுள்ளன. எட்டு வேலையாட்கள் மற்றும் பாதுகாவலர்கள் பணியில் இருந்தபோதிலும், இந்தத் துணிகரத் திருட்டு அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சம்பவத்திற்குப் பிறகு காவல்துறையினரைத் திசைதிருப்ப முயன்ற ரோஷ்னி, வீட்டின் பின்வாசல் வழியாக வெளியேறி ஆட்டோ மூலம் பேகம்பூல் சென்றுள்ளார். அங்கிருந்து ரயிலைத் தவிர்த்துவிட்டு, பேருந்து மூலம் நேராகக் கான்பூரில் உள்ள தனது காதலனின் வீட்டிற்குத் தப்பிச் சென்றுள்ளார். தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக விசாரணையைத் தொடங்கி, 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து அவரது நடமாட்டத்தைக் கண்காணித்தனர். அதன்பின்னர் கான்பூர் வரை அவரைப் பின்தொடர்ந்து சென்று, ரோஷ்னியையும் அவரது காதலரையும் அதிரடியாகக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்; எனினும் அவர்களிடம் இருந்து இதுவரை பணமோ நகைகளோ மீட்கப்படவில்லை. திருடப்பட்ட பொருட்கள் வேறு எங்கேனும் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சந்தேகத்தின் பேரில் அவர்களின் உறவினர்கள் மற்றும் அறிமுகமானவர்களின் வீடுகளிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொழிலதிபரின் சமையல்காரரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ரோஷ்னிதான் தேநீர் தயாரித்து வழங்கியதும், அதன் பின்னரே அவர் மாயமானதும் தெரியவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
