CRIME
“நான் இருக்குற டென்ஷன்ல கேமராவை ஒடச்சிருவேன்!” – காணாமல் போன சிறுமியின் தாயார் ஆக்ரோஷம்.. வைரல் வீடியோ..!!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டி கிராமத்தில், கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடிய 7 வயது சிறுமி ஹேமலதா, அன்றைய தினமே நள்ளிரவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது திடீரென மாயமானார். இந்த வழக்கை உள்ளூர் காவல்துறையின் 10 தனிப்படைகள் அமைத்துத் தேடியும் எந்தத் துப்பும் கிடைக்காததால், எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்களின் போராட்டங்களைத் தொடர்ந்து, வழக்கு தற்போது சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது காஞ்சிபுரம் டி.எஸ்.பி தலைமையிலான சி.பி.சி.ஐ.டி போலீசார், அப்பகுதியில் உள்ள செல்போன் டவர் தரவுகள், சந்தேகத்திற்குரிய 600-க்கும் மேற்பட்ட அழைப்புகள் மற்றும் அப்பகுதி செங்கல் சூளைகளில் தீவிர சோதனைகளை மேற்கொண்டு சிறுமியைத் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது அந்தச் சிறுமியின் தாயார் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். தார்மீக ரீதியாக பெரும் சோகத்திலும் பதற்றத்திலும் இருந்த அவரிடம்,செய்தி ஊடகங்கள் தொடர்ந்து கேமராக்களை நீட்டி கேள்வி எழுப்பியதால் அவர் ஆத்திரமடைந்தார். தான் இருக்கும் கடுமையான மன உளைச்சலில் “கேமராவை புடுங்கி ஒடச்சிருவேன்” என்று அவர் ஊடகத்தினரை எச்சரிக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியதோடு, ஊடகங்களின் டிஆர்பி வெறிக்கு நெட்டிசன்கள் மத்தியில் கடும் கண்டனங்களும் எழுந்துள்ளன. தங்களின் சுய லாபத்திற்காகவும், பரபரப்பிற்காகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் தனியுரிமையைப் பறித்து, அவர்களை மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக்கும் இத்தகைய ஊடகச் சீரழிவை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஒரு குடும்பத்தின் துயரத்தை செய்தியாக்கும் போது ஊடகங்கள் கடைப்பிடிக்க வேண்டிய குறைந்தபட்ச மனிதநேயத்தையும், நெறிமுறைகளையும் இந்தச் சம்பவம் மீண்டும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
