CRIME
“எங்களுக்குப் பொறுப்பில்லை, கூட்டிட்டுப் போங்க…” வாயில் நுரை தள்ளிய பின் கைகழுவிய மருத்துவர்கள்.. ஆம்புலன்ஸிலேயே துடிதுடித்து கர்ப்பிணி.. வெடித்த போராட்டம்.. பரபரப்பு பின்னணி…!!
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் ஷாத்நகர் அரசு மருத்துவமனையில், பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு மருத்துவர்கள் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக இருந்ததால், தாயும் வயிற்றில் இருந்த குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்த துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கொண்டூர்க் மண்டலம் செருகுபள்ளி கிராமத்தைச் சேர்ந்த ராதா (28) என்ற பெண்ணுக்குப் பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, அவரது குடும்பத்தினர் காலை 11 மணியளவில் ஷாத்நகர் அரசு மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுள்ளனர். சுகப்பிரசவம் ஆகிவிடும், சிறிது நேரம் காத்திருக்குமாறு கூறி மருத்துவமனை ஊழியர்கள் மாலை 5:30 மணி வரை சிகிச்சையைத் தாமதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. ராதாவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து, வாயில் நுரை தள்ளியபடி அவர் மயங்கி விழுந்ததும், தங்களுக்குப் பொறுப்பில்லை எனக் கூறி, உடனடியாக ஐதராபாத் மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்லுமாறு மருத்துவர்கள் கை கழுவியுள்ளனர்.
இதையடுத்து, குடும்பத்தினர் ரூ. 9,000 செலவழித்து தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அவரை ஐதராபாத் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்குள்ள மருத்துவர்கள் சோதித்தபோது, ராதாவும் அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்தச் சோகத்திற்கு மத்தியிலும், உயிரிழந்த ராதாவின் கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு எந்தவிதத் தகவலும் தெரிவிக்காமல், காவல்துறையினர் அவரது உடலை அங்கிருந்து எடுத்துச் சென்று மறைத்துவிட்டதாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கண்ணீருடன் குற்றம் சாட்டுகின்றனர். தன் காலால் நடந்து சென்ற பெண், மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்ததோடு, அவளது உடலைக் கூட தங்களுக்கு ஒப்படைக்காமல் காவல்துறையினர் அராஜகம் செய்வதாகக் கூறி மருத்துவமனைக்கு எதிராக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
