LATEST NEWS
“பிளான் எல்லாம் ஓகே… ஆனா..! லேசர் லைட், மயக்க ஊசியோட ‘மாஸ்டர் பிளான்’.. கடைசியில் அசந்து தூங்கி போலீசில் சிக்கிய 4 இளைஞர்கள்..!!
கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில் முகமூடி, கத்தி, மயக்க மருந்து, ஆசிட் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுடன் கொள்ளையடிக்க தயாராக இருந்த 4 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி நகர காவல் துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டபோது, கருப்பு உடை அணிந்திருந்த 4 இளைஞர்கள் அங்கு அசந்து தூங்கிக் கொண்டிருப்பதை கண்டு எழுப்பினர். பின்னர் அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனையிட்டதில், கத்தி, முகமூடி, கையுரைகள், மயக்க மருந்து, ஊசி, லேசர் லைட், பூச்சி கொல்லி மருந்து மற்றும் ஆசிட் போன்ற அதிர்ச்சியளிக்கும் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து அந்த இளைஞர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்ததில், அவர்களில் இருவர் கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்தது. மேலும், அந்த 4 பேரும் சமூக வலைதலங்களில் கொள்ளை தொடர்பான வீடியோக்களை பார்த்து அதன்படி கொள்ளையடிக்க திட்டமிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். கைரேகை பதிவாகாமல் இருக்க கையுரைகள், அடையாளம் தெரியாமல் இருக்க முகமூடிகள், சி.சி.டி.வி. கேமராக்களை மறைக்க ஸ்ப்ரே பெயிண்ட், யாராவது பிடிக்க முயன்றால் மயக்க மருந்து செலுத்த ஊசி என பல்வேறு ஏற்பாடுகளுடன் அவர்கள் ‘மாஸ்டர் பிளான்’ போட்டுள்ளனர்.
பகல் நேரத்தில் உணவு டெலிவரி ஊழியர் போல் வேடமணிந்து கொள்ளையடிப்பதற்கு நோட்டமிட்டவர்கள், இரவில் தங்கள் திட்டத்தை செயல்படுத்த தயாராக இருந்துள்ளனர். அத்துடன் தங்களுக்குள் ரகசியமாக சைகை கொடுக்க லேசர் லைட்டையும் அவர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக 4 பேர் மீதும் கொள்ளை முயற்சி தொடர்பான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
