LATEST NEWS
“வேலை பறிபோனதால் சைக்கோ ஆனேன்” மனைவியின் தலையைத் துண்டித்து காளி கோயிலில் அமர்ந்து பூஜை செய்த கொடூரன் – கண் கலங்க வைக்கும் பின்னணி!
மேற்கு வங்க மாநிலம் தக்ஷின் தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கங்காராம்பூர் பகுதியில், வேலையிழந்த முன்னாள் பேருந்து நடத்துனர் ஒருவர் தனது மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்து, அவரது துண்டிக்கப்பட்ட தலையுடன் காளி கோயிலில் அமர்ந்திருந்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உயிரிழந்த பெண் 35 வயதான சீமா சர்க்கார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
காவல்துறையினர் மற்றும் உள்ளூர் மக்கள் அந்தச் சிறிய காளி கோயிலுக்குச் சென்று பார்த்தபோது, ரத்தம் தோய்ந்த கத்தியுடன் அமர்ந்திருந்த கணவர் ரிண்டு கோஷின் மடியில் அவரது மனைவியின் துண்டிக்கப்பட்ட தலை இருந்தது. மேலும், இந்த பயங்கரமான காட்சியைப் பார்த்தபடி அவரது இரு சிறு வயது மகன்களும் அந்த இடத்திலேயே அமைதியாக அமர்ந்திருந்தது காண்போரை உலுக்கியுள்ளது.
கைது செய்யப்பட்ட பின்னர் ஊடகங்களிடம் பேசிய குற்றவாளி ரிண்டு கோஷ், அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் (NBSTC) இருந்து தனது வேலை பறிபோனதாகவும், அதைத் தொடர்ந்து காவல் நிலையங்களுக்கு அலைந்ததால் தனது மனநிலை பாதிக்கப்பட்டு ‘சைக்கோ’ போல மாறிவிட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். வேலை இழந்த பின்னர் அவர் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்ததாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், ரிண்டு கோஷ் சமீபகாலமாக அசைவ உணவுகளைத் தவிர்த்து முற்றிலும் சைவமாக மாறியதாகவும், அவர் தீவிரமாகத் தந்திர மந்திரங்கள் மற்றும் சூனிய வழிபாடுகளில் ஈடுபட்டு வந்ததாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், இந்த கொடூரக் கொலை குடும்பத் தகராறு மற்றும் வறுமையின் விரக்தியால் நடந்ததா, அல்லது ஏதேனும் நரபலி கொடுக்கும் நோக்கில் மூடநம்பிக்கையின் அடிப்படையில் நடத்தப்பட்டதா என்ற கோணங்களில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
