CRIME
44 மாணவிகளுக்கு ஒரே நேரத்தில் வாந்தி, மயக்கம்.. குருகுலப் பள்ளியில் நடந்த விபரீதம்… மூடி மறைக்க முயன்ற நிர்வாகம்..!!
ஆந்திரப் பிரதேச மாநிலம் பார்வதிபுரம் மன்யம் மாவட்டத்தில் உள்ள குருபாம் பழங்குடியின மாணவிகளுக்கான குருகுலப் பள்ளியில் 44 மாணவிகள் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவிகள் அனைவரும் ஒரே நேரத்தில் வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட போதிலும், பள்ளி நிர்வாகம் இந்த விபரீதச் சம்பவத்தை வெளியுலகிற்குத் தெரியாமல் ரகசியமாக மறைக்க முயன்றதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த ஆண்டிலும் இதே குருகுலப் பள்ளியில் மாணவிகள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, அதில் மூன்று மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் அதே போன்றதொரு அலட்சியப் போக்கு அரங்கேறியுள்ளது.
இந்த விபத்து நடந்து பல மணி நேரம் கடந்தே விஷயம் வெளியில் தெரிந்ததால், கல்வித்துறை மற்றும் பள்ளி அதிகாரிகள் மாணவிகளின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு விஷயத்தில் எந்தவொரு வெளிப்படைத்தன்மையும் இன்றிச் செயல்படுவதாகப் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆந்திரப் பிரதேச அரசுப் பள்ளிகளில் மட்டுமே இது போன்ற சம்பவங்கள் ஏன் தொடர்கின்றன என்று கேள்வி எழுப்பியுள்ள பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளின் உடல்நிலை குறித்த விபரங்களை ஏன் முன்கூட்டியே தங்களுக்குத் தெரிவிக்கவில்லை எனப் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தத் தொடர் அலட்சியம் குறித்து உரிய விசாரணை நடத்தி, தவறு செய்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை அப்பகுதியில் வலுத்துள்ளது.
