LATEST NEWS
“இனி இவள் என் மருமகள் அல்ல, என் மகள்…” 28 வயதில் கணவரை இழந்த பெண்ணுக்கு மாமியார் செய்த காரியம்.. கேரளாவில் நடந்த நெகிழ்ச்சிச் சம்பவம்!
கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள அரீக்கரா பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியை தாரா (60), தனது மருமகளுக்குத் தாயாக மாறி மறுமணம் செய்து வைத்த நெகிழ்ச்சியான சம்பவம் பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது. தாராவின் மகன் கண்ணன் (32) என்பவருக்கும் கிருஷ்ணா (28) என்ற இளம்பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கண்ணன் கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூலை 9-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கணவரின் எதிர்பாராத மரணத்தால் மிகுந்த மனவேதனை அடைந்த கிருஷ்ணா, கணவரின் நினைவுகளுடன் மாமியார் தாராவின் வீட்டிலேயே தொடர்ந்து வசித்து வந்தார்.
இளம் வயதிலேயே கணவரை இழந்த மருமகள் கிருஷ்ணாவின் எதிர்கால வாழ்க்கை இருண்டு விடக்கூடாது எனக் கருதிய தாரா, அவரைத் தனது சொந்த மகளாகவே பாவித்து மறுமணம் செய்து வைக்கத் தீர்மானித்தார். அதன்படி, தகுதியான இளைஞர் ஒருவரைத் தேர்வு செய்து, இரு வீட்டாரின் முழு சம்மதத்துடன் கிருஷ்ணாவிற்கு முறைப்படி மறுமணம் செய்து வைத்தார். மருமகளின் கண்ணீரைத் துடைத்து அவருக்குப் புதிய வாழ்க்கை அமைத்துக் கொடுத்த மாமியார் தாராவின் இந்தத் தாயுள்ளம் கொண்ட செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
