CRIME
“கைது செய்வாங்கன்னு பயந்து…” இரட்டைக் கொலையை அரங்கேற்றிய கொடூரக் கொள்ளையன்..! போலீஸ் போட்ட மாஸ்டர் பிளானால் சிக்கிய நபர்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில் நவம்பர் 4-ஆம் தேதி இரவு நிகழ்ந்த அதிர்ச்சியூட்டும் இரட்டைக் கொலை வழக்கின் மர்மத்தைக் காவல்துறை விடுவித்துள்ளது. குர்சஹாய்கஞ்ச் கோட்வாலி பகுதியில் உள்ள சஞ்சீவ் என்பவரது வீட்டில் திருடும் நோக்கத்துடன் மேல்வழியாக நுழைந்த குற்றவாளியை, தால்கிராம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட போஜாபூர் கிராமத்தைச் சேர்ந்த யோகேஷ் ராஜ்புத் என்கிற பங்கா என காவல் கண்காணிப்பாளர் வினோத் குமார் அடையாளம் கண்டுள்ளார். வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சஞ்சீவ் மற்றும் அவரது மனைவி விழித்துக்கொண்டதால், பிடிபடுவோம் என்ற அச்சத்தில் குற்றவாளி அவர்கள் மீது தடியால் தாக்குதல் நடத்தி, கழுத்தை நெரித்து கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
இந்தக் கொடூரச் செயலுக்குப் பிறகு, குற்றவாளி உயிரிழந்த பெண்ணின் சடலத்தின் மீது பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, அங்கிருந்த பச்சிளம் குழந்தையையும் தூக்கி வீசியதில் அக்குழந்தை படுகாயமடைந்துள்ளது. சம்பவத்தைத் தொடர்ந்து தப்பியோடிய குற்றவாளியைப் பிடிக்கப் பல தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் பிற ஆதாரங்களின் அடிப்படையில் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வந்தது.
இதன் தொடர்ச்சியாக, ஞாயிற்றுக்கிழமை குர்சஹாய்கஞ்ச் பகுதியில் உள்ள கசாரி வனப்பகுதியில் குற்றவாளியைக் காவல்துறையின் கூட்டுப் படைகள் சுற்றி வளைத்தன. அப்போது ஏற்பட்ட என்கவுன்ட்டரில், காவல்துறையினர் நடத்திய பதில் தாக்குதலில் குற்றவாளியின் இரண்டு கால்களிலும் குண்டு பாய்ந்தது. காயமடைந்த நிலையில் கைது செய்யப்பட்ட அவர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் காவல் கண்காணிப்பாளர் வினோத் குமார் தெரிவித்துள்ளார்.
