வீடியோ எடுக்காதே.. கேமராவை கட் பண்ணு..! செய்தியாளர்களிடம் பாய்ந்த தவெக எம்.எல்.ஏ தங்கப்பாண்டி… மதுரையில் பரபரப்பு..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

வீடியோ எடுக்காதே.. கேமராவை கட் பண்ணு..! செய்தியாளர்களிடம் பாய்ந்த தவெக எம்.எல்.ஏ தங்கப்பாண்டி… மதுரையில் பரபரப்பு..!!!

Published

on

விளாங்குடி முகாமிற்குப் பட்டாசு வெடித்து, சினிமா பாணியில் கார்கள் புடைசூழ வந்திறங்கிய எம்.எல்.ஏ தங்கப்பாண்டியனை தவெக தொண்டர்கள் திடீரெனச் சூழ்ந்துகொண்டனர். காரை விட்டு கீழே இறங்குமாறு அவர்கள் வற்புறுத்திய நிலையில், அவர் இறங்க மறுத்துக் காரில் இருந்தபடியே பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தொண்டர்கள், “தேர்தலில் உங்களுக்காகவும், அண்ணன் விஜய்க்காகவும் நாங்கள் இரவு பகலாக உழைத்து உங்களை ஜெயிக்க வைத்தோம். ஆனால், ஆரம்பத்தில் இருந்தே உழைத்த எங்களுக்குக் கட்சியில் எந்தப் பதவியும் தராமல், மாற்றுக்கட்சிகளில் இருந்து அண்மையில் வந்தவர்களுக்கு உடனடியாகப் பதவிகளை அள்ளி வழங்கியிருப்பது எந்த விதத்தில் நியாயம்?” என்று மாவட்டச் செயலாளர் என்றும் பாராமல் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.

தொண்டர்களின் இந்தத் திடீர் கேள்விகளால் நிலைதடுமாறிப் போன எம்.எல்.ஏ தங்கப்பாண்டியன், கோபத்தின் உச்சிக்கே சென்றார். “நான் இந்தத் தெருவுக்குள் வர வேண்டுமா வேண்டாமா? எதுவாக இருந்தாலும் மனுவாகக் கொடுங்கள், இங்கு பேச முடியாது” என்று ஆவேசமாகப் பேசினார். இந்த அசாதாரண சூழ்நிலையை அங்கிருந்த செய்தியாளர்கள் மற்றும் ஊடகப் பிரிவினர் தங்களது கேமராக்களில் பதிவு செய்ய முயன்றபோது, மேலும் ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ, “வீடியோ எடுக்காதே, கேமராவை கட் பண்ணு” என்று மிரட்டும் தொனியில் கத்தியுள்ளார். அவரது ஆதரவார்களும் செய்தியாளர்களைப் பதிவு செய்ய விடாமல் தடுத்ததால், அவ்விடத்தில் கடுமையான தள்ளுமுள்ளும், கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.

Advertisement

“நீங்கள் மாவட்டச் செயலாளர் என்பதால் தான் இங்கு நேரில் நியாயம் கேட்கிறோம், இதற்கு எப்படி மனு கொடுக்க முடியும்?” என்று தொண்டர்கள் தொடர்ந்து குரல் எழுப்பியதால், அதற்குப் பதிலளிக்க முடியாமல் எம்.எல்.ஏ தங்கப்பாண்டியன் அங்கிருந்து தனது காரில் வேகமாகப் புறப்பட்டுச் சென்றார். ஏற்கனவே, தவெக பெண் நிர்வாகி ஒருவர், இந்த எம்.எல்.ஏ மற்றும் அவரது மகன் மீது கட்சிப் பதவிக்காகப் பணம் பெற்றதாகப் புகார் கூறியிருந்த சர்ச்சையும், அண்மையில் பொதுவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண்கள் மயக்கமடைந்ததைக் கண்டுகொள்ளாமல் சென்ற விவகாரமும் புகைச்சலைக் கிளப்பியிருந்த நிலையில், தற்போது சொந்தக் கட்சித் தொண்டர்களின் இந்த அதிரடி முற்றுகைப் போராட்டம் தவெக தலைமைக்கும் முதலமைச்சர் விஜய்க்கும் புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in