LATEST NEWS
“அப்பாடா.. ஒருவழியா வந்தாச்சு..!” உயிரைக் குடிக்கும் டெங்குவுக்கு முதல் தடுப்பூசி.. இந்தியா அதிரடி ஒப்புதல்..!!
இந்திய மருத்துவத் துறையில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, டெங்கு காய்ச்சல் அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க ‘க்யூடெங்கா’ என்ற பிரத்யேக தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தற்போது பச்சைக்கொடி காட்டியுள்ளது. ‘டகேடா பயோ பார்மசூட்கல்ஸ்’ நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தத் தடுப்பூசியை, 4 முதல் 60 வயதுக்குட்பட்ட யார் வேண்டுமானாலும் செலுத்திக் கொள்ளலாம். இதன் மிகப்பெரிய சிறப்பம்சம் என்னவென்றால், மற்ற தடுப்பூசிகளைப் போல இதற்கு முன்னதாக எந்தவொரு ரத்தப் பரிசோதனையும் செய்யத் தேவையில்லை. அதாவது, ஒருவருக்கு ஏற்கனவே டெங்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் அல்லது வராமல் இருந்தாலும், அவர்கள் நேரடியாக இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள தகுதியானவர்கள் ஆவர். உலகளவில் ஏற்கனவே 43 நாடுகளில் பாதுகாப்பாகப் பயன்படுத்தப்பட்டு, சுமார் 3.2 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் மக்களுக்குச் செலுத்தப்பட்டுள்ள இந்த க்யூடெங்கா தடுப்பூசி, இனி இந்தியாவிலும் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதில் ஒரு கேம்-சேஞ்சராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக சுகாதார அமைப்பின் முன் தகுதி சான்றிதழைப் பெற்றுள்ள இத்தடுப்பூசி, மூன்று மாத இடைவெளியில் தோலுக்குக் கீழே 0.5 மில்லி லிட்டர் அளவில் இரண்டு டோஸ்களாகச் செலுத்தப்பட வேண்டும். இந்தியாவில் நடத்தப்பட்ட மூன்றாம் கட்ட மருத்துவப் பரிசோதனைகள் உட்பட, உலகளவில் 28,000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களைக் கொண்டு நடத்தப்பட்ட 19 கட்டப் பரிசோதனைகளின் முடிவுகளின் அடிப்படையிலேயே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏழு ஆண்டுகால நீண்டகாலத் தரவுகளின்படி, டெங்குவை உண்டாக்கும் நான்கு வகையான வைரஸ்களுக்கு எதிராகவும் இத்தடுப்பூசி சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தியையும் பாதுகாப்பையும் அளிப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. யுனிசெஃப் போன்ற உலகளாவிய அமைப்புகளின் கொள்முதல் பட்டியலிலும் இடம் பெற்றுள்ள இத்தடுப்பூசி, இந்தியாவின் பொது சுகாதார மேம்பாட்டிற்குப் பெரும் துணையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
