எடப்பாடியாருக்கு துரோகம் செய்யலைன்னா… உங்க பிள்ளைங்களோட முருகன் கோயிலுக்கு வந்து சத்தியம் பண்ண தயாரா..? C.V.சண்முகத்திற்கு அதிமுக நிர்வாகி விட்ட பகிரங்க சவால்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

எடப்பாடியாருக்கு துரோகம் செய்யலைன்னா… உங்க பிள்ளைங்களோட முருகன் கோயிலுக்கு வந்து சத்தியம் பண்ண தயாரா..? C.V.சண்முகத்திற்கு அதிமுக நிர்வாகி விட்ட பகிரங்க சவால்..!!

Published

on

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகச் செயல்படுவதாகக் குற்றம்சாட்டி, மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகத்திற்கு அதிமுக கிளியனூர் ஒன்றிய செயலாளர் ஏ.டி.பக்தவச்சலம் பகிரங்க சவால் விடுத்துள்ளார். மயிலம் பகுதியில் நடந்த கூட்டத்திற்குப் பிறகு பேசிய அவர், எடப்பாடியாருக்கு எதிராக உட்கட்சித் துரோகங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் குற்றம்சாட்டினார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வரக்கூடாது என்ற நோக்கத்தில் சி.வி.சண்முகம், தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட 25 மாவட்ட செயலாளர்கள் செயல்பட்டதாகப் சாடினார். தங்களது ஆதரவாளர்களுக்குத் தொகுதிகளைப் பெற்றுத் தந்து, தேர்தல் பணிகளைச் செய்யாமல் அதிமுக வேட்பாளர்களின் தோல்விக்குக் காரணமானதால் தமிழகத்தில் 25 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு பறிபோனதாகத் தெரிவித்தார்.

Advertisement

தொண்டர்களுக்கு வாய்ப்பளிக்க மாவட்டங்களை மூன்றாகப் பிரிக்க எடப்பாடியார் முயன்றபோது, தன் ஆதிக்கத்திற்காகச் சி.வி.சண்முகம் அதை எதிர்த்ததாகக் கூறினார். “கழகத்திற்கும் எடப்பாடியாருக்கும் துரோகம் செய்யவில்லை என்றால், சி.வி.சண்முகம் தனது பிள்ளைகளுடன் முருகன் கோயிலுக்கு வரட்டும்; நானும் என் பிள்ளைகளுடன் வருகிறேன். கழக வேட்பாளர்களைத் தோற்கடிக்கவில்லை என இறங்கி சத்தியம் செய்யத் தயாரா?” என சவால் விடுத்தார்.

சாதாரண கிளைச் செயலாளராக இருந்து உழைப்பால் பொதுச்செயலாளர் நிலைக்கு உயர்ந்தவர் எடப்பாடி பழனிசாமி என்றும், அவரை விமர்சிக்கச் சி.வி.சண்முகத்திற்குத் தகுதி இல்லை என்றும் சாடினார். மேலும், பா.ம.க கூட்டணியைத் தொடர்ந்து எதிர்த்து வரும் சி.வி.சண்முகம், ஜெயலலிதா காலத்திலேயே கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக ஓரங்கட்டப்பட்டவர் என்றும் கூறியுள்ளார். அதிமுகவில் 99 சதவீத தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியின் பக்கமே உறுதியாக இருப்பதாகவும், வரும் காலத்தில் அவர் மீண்டும் தமிழக முதலமைச்சராக வருவது உறுதி என்றும் பக்தவச்சலம் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in