CRIME
“என்னை ஏமாத்திட்டா..!” வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வெடித்த ஆத்திரம்… மனைவியையும் தங்கையையும் வரிசையாகத் தலையில் சுட்டுக்கொன்ற கணவனின் கொடூரம்..! பின்னணியில் சுழன்றடிக்கும் மர்ம புயல்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கோமதி நகர் விவேக் கண்ட் பகுதியில் உள்ள ஐசிஐசிஐ வங்கியில் உதவி மேலாளராகப் பணிபுரிந்து வந்த திவ்யா மிஸ்ராவை, அவரது கணவர் மானஸ் வியாழக்கிழமை மதியம் வங்கிக்கு வெளியே அழைத்துப் பேசியுள்ளார். இருவருக்கும் இடையே உரையாடல் நடந்துகொண்டிருந்தபோது, திடீரென மானஸ் துப்பாக்கியால் திவ்யாவைச் சுட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த திவ்யா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இருவரும் கடந்த சில காலமாகவே கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும், விவாகரத்து கோரி திவ்யா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனைவியைச் சுட்ட பிறகு, மானஸ் ஹுசடியா சௌரக் அருகே உள்ள தனது வாடகை வீட்டிற்குச் சென்று தனது சகோதரியையும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தானும் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விபரீத சம்பவத்திற்கு முன்னதாக, மானஸ் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் குடும்ப உறவுகள் மற்றும் துரோகம் குறித்து பதிவிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் திவ்யா, மானஸின் சகோதரி மற்றும் மானஸ் ஆகிய மூன்று பேருமே உயிரிழந்தனர். உயிரிழந்த மூன்று நபர்களின் தலையிலும் துப்பாக்கிச் சூடு காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நடந்த இடத்திலிருந்து காவல்துறையினர் மூன்று துப்பாக்கிகளை பறிமுதல் செய்துள்ளனர். மானஸ் ஒவ்வொருவரையும் சுடுவதற்கு தனித்தனி துப்பாக்கிகளைப் பயன்படுத்தினாரா அல்லது இதன் பின்னணியில் வேறு ஏதேனும் கோணம் உள்ளதா என்பது குறித்து போலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள் யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளன, அவை மானஸிற்கு எப்படி கிடைத்தன என்பது குறித்தும், வங்கிக்கு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும் தடம் அறிவியல் சோதனைகள் மூலமும் காவல்துறை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
