CRIME
விடுதியை விட்டு துரத்திய ஆத்திரம்… முகமூடி கழன்றதால் வெறிச்செயல்..! பணத்துக்காக தலைமை ஆசிரியையை 27 முறை குத்தி கொலை செய்த 10-ஆம் வகுப்பு மாணவர்கள்…! தெலுங்கானாவில் நடந்த பகீர் சம்பவம் ..!!
தெலுங்கானாவில் பள்ளி தலைமை ஆசிரியரை மாணவர்கள் பணத்துக்காக கத்தியால் குத்திப் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்த ரூபா ரெட்டி, கடந்த ஆகஸ்ட் 11 அன்று தனது வீட்டில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்திய காவல்துறையினர், கொலையை செய்தது அதே பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் இரண்டு சிறுவர்கள் என்பதைக் கண்டுபிடித்தனர்.
கொலை செய்யப்படுவதற்கு முன்பு ரூபா ரெட்டி தனது அத்தையிடம் போனில் பேசும்போது யாரையோ பார்த்து ‘பாபு’ என்று அழைத்துள்ளார். இது அவர் மாணவர்களை அழைக்கும் சொல் என்பதால், சம்பவம் நடந்தபோது பள்ளிக்கு வராத 13 மாணவர்களிடம் போலிசார் விசாரணை நடத்தினர். அதில் இரு மாணவர்கள் கையில் அதிக அளவு பணம் வைத்துக்கொண்டு ஆடம்பரமாக செலவு செய்து வந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. சோதனையில் அவர்களிடம் இருந்த ரூ. 1.54 லட்சம் பணத்தில் ரத்தக் கறை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அது ரூபா ரெட்டியின் ரத்தம் என தடம் அறிவியல் சோதனையில் உறுதி செய்யப்பட்டது. மேலும் 70 சிசிடிவி காட்சிகளையும் ஆராய்ந்த பின்னரே அவர்களை போலிசார் கைது செய்தனர்.
கைதான மாணவர்களில் ஒருவன் மதுப்பழக்கம் மற்றும் பைக் மீது மோகம் கொண்டவன் ஆவான். முன்னதாக அவனது பையில் இருந்த செல்போன் மற்றும் பணத்தை பறிமுதல் செய்த ரூபா ரெட்டி, அவனைக் கண்டித்து விடுதியை விட்டு வீட்டுக்கு அனுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவன், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கத் திட்டமிட்டு பள்ளிக் கட்டணப் பணம் இருக்கும் தலைமை ஆசிரியையின் வீட்டை நோட்டம் பார்த்து, தன் நண்பனையும் சேர்த்துக்கொண்டு ஆகஸ்ட் 11-ல் வீட்டிற்குள் நுழைந்துள்ளான். அப்போது முகமூடி விலகியதால் அடையாளம் கண்டுகொண்ட தலைமை ஆசிரியை மாட்டிக்கொடுப்பார் என்ற பயத்தில், அவரை 27 முறை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு பணம் மற்றும் செல்போன்களை எடுத்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர். கொலையாளிகள் இருவரும் சிறுவர்கள் என்பதால் அவர்களைச் சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலிசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
