CRIME
வெறும் ரூ.20 ரூபாய்க்கு ஒரு உயிர் பலியா…?! காசியாபாத்தில் நடந்த நெஞ்சை பதற வைக்கும் கொடூரம்..! போலீஸை பார்த்ததும் துப்பாக்கியால் சுட்ட ரவுடி..! பதிலடி கொடுத்த காசியாபாத் போலீஸ்… பரபரப்பு என்கவுண்டர்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஷாலிமார் கார்டன் பகுதியில் வெறும் 20 ரூபாய் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்துள்ளது. விக்ரம் என்லேவ் பகுதியில் ஆகஸ்ட் 19 அன்று 23 வயதான முஷ்டாக் என்பவருக்கும், 20 வயதான சமீர் என்பவருக்கும் இடையே சிறு தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சமீர், முஷ்டாக்கை கத்தியால் கடுமையாகக் குத்தினார். படுகாயமடைந்த முஷ்டாக் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான குற்றவாளியைத் தேடத் தொடங்கினர்.
கொலைக்குப் பிறகு தப்பி ஓடிய சமீர் ஷாலிமார் கார்டன் பகுதியிலேயே ஒளிந்திருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து, காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது டி.எல்.எஃப் சாலை வழியாக கே.டி.எம் பைக்கில் வந்த சமீரை நிறுத்துமாறு காவல்துறையினர் சிக்னல் செய்தபோது, அவர் தப்பிச் செல்ல முயன்றார். அவரைப் பின்தொடர்ந்து டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் அருகிலுள்ள ஒதுக்குப்புறமான சந்தில் காவல்துறை குழு சுற்றி வளைத்தது. இதனால் தப்பிக்க வேறு வழியின்றி, சமீர் தான் வைத்திருந்த சட்டவிரோத துப்பாக்கியால் காவல்துறையினரை நோக்கி நேரடியாகச் சுட்டுத் தள்ள முயன்றார்.
காவல்துறையினர் தற்காப்புக்காகப் பதிலடி கொடுத்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில், சமீரின் இடது காலில் தோட்டா பாய்ந்தது. இதில் பைக்குடன் கீழே விழுந்த அவரை காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்து சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். டெல்லி சீமாபுரி பகுதியைச் சேர்ந்த சமீர் மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட சமீரிடமிருந்து ஒரு சட்டவிரோதத் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் திருடப்பட்ட பைக் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
