LATEST NEWS
ஜெயிச்சா தொகுதியில தங்குவேன்னு சொன்னாரே.. அவர எங்க..? CM விஜய் உடனே தலையிடணும்… தவெக அமைச்சர் ஸ்ரீநாத்துக்கு எதிராகக் கொதித்தெழுந்த கூட்டணி கட்சியினர்..!!
‘தேர்தலில் வெற்றி பெற்றால் தூத்துக்குடி தொகுதியிலேயே தங்கி மக்கள் பணியாற்றுவேன்’ என்ற தேர்தல் வாக்குறுதியை மீறி, தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினரும் மீன்வளத்துறை அமைச்சருமான ஸ்ரீநாத் வாரம் ஒருமுறை மட்டுமே தொகுதிக்கு வருவதாகப் பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் அமைச்சரின் செயல்பாடுகள் மீது பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ள நிலையில், தவெக-வின் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் (சிபிஎம்) தற்போது அமைச்சர் ஸ்ரீநாத் மீது பகிரங்கமாகத் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
தொகுதியில் நிலவும் குடிநீர், சாலை வசதி போன்ற அத்தியாவசிய மக்கள் பிரச்சினைகளுக்காக அமைச்சரை நேரடியாகத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், அவரது உதவியாளர்களை அணுகினாலும் அவர்களிடம் இருந்து எந்தவிதமான முறையான மற்றும் சரியான பதிலும் கிடைப்பதில்லை என்றும் கூட்டணி கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். தொகுதி மக்களின் கோரிக்கைகள் அலட்சியப்படுத்தப்படுவதாகக் கூறி, இந்த விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் அதிரடியாகப் பதிவிட்டு வருவது தூத்துக்குடி அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
