LATEST NEWS
அதிர்ச்சி..! அரசு வழக்கறிஞர் நியமனத்தில் ரூ.30 லட்சம் லஞ்சப் புகார்… உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தவெக பெண் வழக்கறிஞர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்..!!
தமிழகத்தில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ரூ.5 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை லஞ்சம் பெற்றுள்ளதாக, விழுப்புரத்தைச் சேர்ந்த தவெக பெண் வழக்கறிஞர் ஞானசவுந்தரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பாணையின்படி, பட்டியல் இனத்தைச் சேர்ந்த தானும் தவெக வழக்கறிஞர் என்ற முறையில் விண்ணப்பித்ததாகவும், ஆனால் தகுதி இல்லாதவர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நியமன முறைகேடு தொடர்பாக விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தகுதியானவர்களை நியமிக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார். மேலும், தன்னை விழுப்புரம் மாவட்ட அரசு வழக்கறிஞராக நியமிக்க வேண்டும் என்றும், அதுவரை இந்த நியமன செயல்முறைக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் வலியுறுத்தியிருந்தார்.
இப்படியிருக்க, விழுப்புரம், வானூர், திண்டிவனம், செஞ்சி உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கான 20 பேர் கொண்ட அரசு வழக்கறிஞர்கள் பட்டியல் அண்மையில் வெளியானது. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ஞானசவுந்தரியின் பெயர் அந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை.
இதற்கிடையே, கட்சியின் கொள்கைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் முரணாகச் செயல்பட்டு, பொய் குற்றச்சாட்டுகளைக் கூறியதாகக் குறிப்பிட்டு ஞானசவுந்தரியை தவெக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் உத்தரவிட்டுள்ளார். அவர் வழக்கு தொடுத்து பல நாட்களாக நடவடிக்கை எடுக்காத கட்சி தலைமை, அரசு வழக்கறிஞர்கள் பட்டியல் வெளியான மறுநாளே அவரை நீக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
