LATEST NEWS
“யாராவது GPay-ல லஞ்சம் வாங்குவாங்களா?”.. திமுகவின் மெகா சதிவலை… பின்னணியில் இருக்கும் மாஜி எம்எல்ஏ… கோட்டையை உலுக்கும் வீராசாமியின் பரபரப்பு பேட்டி..!!
செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட தவெக இணை செயலாளரும் மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவருமான வீராசாமி, தன் மீது சுமத்தப்பட்ட லஞ்சப் புகாரை முற்றிலும் மறுத்து அது திமுகவின் திட்டமிட்ட அரசியல் சதி என்று விளக்கியுள்ளார். இணையத்தில் வெளியான வைரல் வீடியோ குறித்துப் பேசிய அவர், அது லஞ்சம் அல்ல என்றும், தனது நண்பர் நவீன் என்பவர் தன்னிடம் வாங்கிய அவசரக் கடனைத் திருப்பிக் கொடுத்தபோது எடுக்கப்பட்ட வீடியோ என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். ஒரு லட்சம் ரூபாயை ஜிபே மூலமாகவும், மீதி 30,000 ரூபாயை அலுவலகத்தில் நேரில் தந்ததையும் மறைமுகமாகப் படம் பிடித்து லஞ்சம் போல சித்தரித்துள்ளதாகக் கூறிய அவர், பில் பாஸ் செய்யும் அதிகாரம் பிடிஓ-விடமே உள்ள சூழலில் தம்மால் லஞ்சம் வாங்க முடியாது என்றும், இது லஞ்சமாக இருந்தால் ஏன் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளிக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த அவதூறு பரப்புரையின் பின்னணியில் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இதயவர்மன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் அருண்குமார் ஆகியோர் இருப்பதாக வீராசாமி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த முதல் ஊராட்சி மன்ற தலைவர் நான்தான் என்பதால், அதைச் சகித்துக் கொள்ள முடியாத திமுகவினர் பழிவாங்கும் நோக்கில் செயல்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலத்தில் வார்டு உறுப்பினர்களைத் தூண்டிவிட்டு தந்து பதவியைப் பறித்ததாகவும், நீதிமன்றப் போராட்டத்திற்குப் பின் மீண்டும் தலைவராகப் பொறுப்பேற்றது பிடிக்காமலேயே தவெக மற்றும் தனது பெயருக்குக் களங்கம் விளைவிக்க நவீனைப் பயன்படுத்தி இந்தச் சதியை அரங்கேற்றியுள்ளனர் என்றும் அவர் விரிவாகத் தெரிவித்துள்ளார்.
