LATEST NEWS
“‘அனுசரித்துப் போ’னு இனி மகள்கிட்ட சொல்லாதீங்க.. உயிருக்கே ஆபத்து!” 25 வயதுப் பெண் & 15 மாதக் குழந்தை கொடூரக் கொலை வழக்கு… பெற்றோருக்கு நீதிமன்றம் கொடுத்த பகீர் எச்சரிக்கை!..!!
குடும்பத்தில் கொடுமைகளைச் சந்திக்கும் மகள்களை அனுசரித்துப் போ, இணங்கிச் செல்’ என்று கூறி வலியுறுத்த வேண்டாம் என அலகாபாத் உயர் நீதிமன்றம் பெற்றோர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. நீதிபதிகள் ராஜேஷ் சிங் சௌஹான் மற்றும் அப்தேஷ் குமார் சௌத்ரி அடங்கிய அமர்வு, பெற்றோரின் இத்தகைய சமாதானப் பேச்சுக்கள் அவர்களை அறியாமலேயே குற்றவாளிகளுக்குச் சாதகமாக அமைந்து, பெண்களைத் தொடர்ச்சியான வன்முறைக்கும் இறுதியில் உயிரிழப்பிற்கும் ஆளாக்கிவிடும் என்று எச்சரித்துள்ளது. 2011-இல் வரதட்சணைக் கொடுமையால் மீனா தேவி என்ற 25 வயதுப் பெண்ணும் அவரது 15 மாதக் குழந்தையும் கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகளின் ஆயுள் தண்டனையை உறுதி செய்து நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கூடுதல் வரதட்சணையாக மோட்டார் சைக்கிள் மற்றும் ரூ.1 லட்சம் கேட்டு கணவர் குடும்பத்தினர் சித்திரவதை செய்தபோது, அது குறித்து மீனா தனது பெற்றோரிடம் பலமுறை புகார் அளித்தும், அவர்கள் அதைச் சாதாரணக் குடும்பப் பிரச்சினை எனக்கூறிச் சமாதானப்படுத்தியுள்ளனர். இதன் விளைவாகவே மீனாவும் அவரது குழந்தையும் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இதனைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், பயம் மற்றும் துன்புறுத்தல் குறித்து மீண்டும் மீண்டும் முறையிடும் ஒரு பெண்ணின் குரல், உதவி மற்றும் பாதுகாப்பிற்கான கோரிக்கையாகவே பார்க்கப்பட வேண்டுமே தவிர, கணவன்-மனைவிக்கு இடையேயான சாதாரணக் கருத்து வேறுபாடாகக் கருதப்படக் கூடாது என்று சுட்டிக்காட்டினர்.
மகள்களின் புகார்களைப் பெற்றோர் பரிவுடனும் உடனடியாகவும் கேட்டு, அவர்களின் பாதுகாப்பையும் கண்ணியத்தையும் பேண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய நீதிமன்றம், பெண்கள் அமைதியாகத் துன்பங்களைச் சகிக்க நிர்பந்திக்கப்படக் கூடாது எனத் தெரிவித்துள்ளது. “தாமதமான வருத்தமும் நீதிமன்ற வழக்குகளும் இழந்த உயிரை மீட்டுத் தராது” எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், ஆபத்தான சூழலில் சரியான நேரத்தில் பெற்றோர் செய்யும் தலையீடு மட்டுமே ஈடுசெய்ய முடியாத இழப்புகளைத் தவிர்க்க உதவும் என்றும், இது குடும்பத்தின் தார்மீக மற்றும் சமூகப் பொறுப்பு என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர்.
