LATEST NEWS
“பெண்களை வீட்டை விட்டு வெளியே அனுப்பக் கூடாது” அவங்க பொதுவெளிக்கு வந்தால் பெரும் அழிவு.. தங்க நகையுடன் ஒப்பிட்டுப் பேசிய கேரள முப்திக்கு கிளம்பும் கடும் எதிர்ப்பு..!!
பெண்கள் வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கக் கூடாது என்றும், அவர்கள் பொதுவெளியில் நுழைவது “பெரும் அழிவுக்கு” வழிவகுக்கும் என்றும் கேரளாவின் கிராண்ட் முப்தியும், அகில இந்திய சன்னி ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச்செயலாளருமான ஷேக் அபுபக்கர் அகமது (காந்தபுரம் அபுபக்கர் முஸ்லியார்) பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொச்சியில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாடு ஒன்றில் பேசிய அவர் இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
தனது உரையின் போது, பெண்கள் தங்களின் கண்ணியத்தைக் காக்க உடலை முழுமையாக மறைக்கும் புர்கா ஆடையை அணிய வேண்டும் என்ற இஸ்லாமிய நடைமுறையை அவர் சுட்டிக்காட்டினார். மேலும், பெண்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என திருக்குர் ஆன் கூறுவதாகவும், இந்தக் கட்டுப்பாடுகள் பெண்களைக் குறைத்து மதிப்பிடுவதற்காக அல்ல, மாறாக அவர்களைப் பாதுகாத்து கௌரவிப்பதற்காகவே என்றும் அவர் தனது பேச்சில் நியாயப்படுத்தியுள்ளார்.
இதற்கு உதாரணமாகப் பேசிய அவர், “ஒரு தங்க நெக்லஸை சாலையோரத்தில் போட்டு வைத்தால் அதன் மதிப்பும் அழகும் அழிந்துவிடும்; அது அழகாக இருக்க வேண்டுமானால் பெட்டிக்குள் பூட்டிப் பாதுகாக்கப்பட வேண்டும்” என்று பெண்களை நகையுடன் ஒப்பிட்டுப் பேசினார். பெண்களின் சுதந்திரத்தை முடக்கும் வகையில் அமைந்துள்ள இந்த பிற்போக்குத்தனமான கருத்துக்கு, கேரள அரசியல் கட்சிகள் மற்றும் பெண்கள் அமைப்புகள் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றன.
