LATEST NEWS
“யாரும் தப்பிக்க முடியாது..!” மேடையில் திமுகவுக்கு நிதி அமைச்சர் மரிய வில்சன் பகிரங்க எச்சரிக்கை..!!
சென்னை துறைமுகம் தொகுதியில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற ‘முதல்வரின் கரம்’ பாராட்டு விழாவில், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசிய நிதி அமைச்சர் மரிய வில்சன், முதலமைச்சர் விஜய் பதவியேற்ற போதே ஊழலற்ற வெளிப்படைத்தன்மையான ஆட்சியை வழங்குவதாக உறுதியளித்ததாகவும், அடுத்த தலைமுறைக்கு லஞ்சம் மற்றும் ஊழல் என்றால் என்னவென்றே தெரியாத அளவுக்குச் சிறந்த அடித்தளத்தை அமைத்து வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், வரவிருக்கும் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் தனியாகத் தணிக்கை அறிக்கை ஒன்று வெளியிடப்படும் என்று கூறினார். அந்த அறிக்கையில் தி.மு.க. அரசின் ஊழல் பட்டியல் விரிவாக இடம்பெறும் என்றும், எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் ஊழல் சார்ந்த ஆதாரங்களைத் தொடர்ந்து வெளியிட்டு, லஞ்சமற்ற தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
‘நீட்’ தேர்வு விவகாரம் குறித்துப் பேசிய அமைச்சர், சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் மாற்றத்தை ஏற்படுத்தியது போல, 2029 பாராளுமன்றத் தேர்தலில் முதலமைச்சர் விஜய் மூலம் நீட் தேர்வுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட்டு அது முற்றிலும் ஒழிக்கப்படும் என்றார். நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், த.வெ.க. அரசின் வரவிருக்கும் பட்ஜெட் மக்களுக்கு 100 சதவீதம் நன்மை அளிக்கக்கூடியதாக இருக்கும் என்று உறுதிபடக் கூறினார்.
