LATEST NEWS
தங்கத்திற்கு மட்டுமல்ல இனி வெள்ளி நகைகளுக்கும் “ஹால்மார்க்’ கட்டாயம்”… மீறினால் ரூ.1 லட்சம் அபராதம் மற்றும் சிறை தண்டனை… அமலாகும் புதிய விதி.!!
தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி நகைகளுக்கும் ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை அதிகரிக்கவும், தூய்மையான வெள்ளி கிடைப்பதை உறுதி செய்யவும் இந்திய தரக்கட்டுப்பாட்டு அமைப்பான ‘பி.ஐ.எஸ்.’ (BIS) இந்த விதிமுறையை வரும் அக்டோபர் மாதம் முதல் அமல்படுத்த முடிவு செய்துள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் கட்டாயமாக்கப்பட்டதை போல, வெள்ளி நகைகளுக்கும் இது ஒவ்வொரு கட்டமாக நாடு முழுவதும் விரிவாக்கப்பட இருக்கிறது. இதற்காக 6 இலக்க ஹால்மார்க் தனித்துவ அடையாள எண் முறை மற்றும் அதற்கான உள்கட்டமைப்புகள் தீவிரமாக விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. ஹால்மார்க் செய்யப்பட்ட வெள்ளி நகைகளில் பி.ஐ.எஸ். முத்திரை, ‘SILVER’ என்ற வார்த்தை, தூய்மை தரம் மற்றும் எச்.யு.ஐ.டி. எண் ஆகியவை இடம்பெறும்.
இந்த புதிய விதிமுறைகளை மீறி முத்திரை இல்லாத வெள்ளி நகைகளை விற்கும் வியாபாரிகளுக்கு பி.ஐ.எஸ். சட்டம் 2016-ன் படி, ஓராண்டு வரை சிறை அல்லது குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படலாம். மேலும், ஹால்மார்க் முத்திரையை தவறாகப் பயன்படுத்தினால் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கவும் சட்டத்தில் கடுமையான வழிவகை செய்யப்பட்டுள்ளது.
