LATEST NEWS
பதவியை இழக்கும் 13 சீனியர்கள்… அனிதா ராதாகிருஷ்ணனுக்கு கல்தா,,? திமுகவின் ‘துணைப் பொதுச்செயலாளர்’ நாற்காலியை குறிவைக்கும் மாஸ்டர் பிளான்..!!
திமுகவில் தற்போது மறுசீரமைப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன. செயற்குழு கூட்ட தீர்மானங்களின் அடிப்படையில், கட்சியின் மாவட்டங்களின் எண்ணிக்கை 78லிருந்து 110ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அதிரடி மாற்றத்தால், 70 வயதைக் கடந்த 13 மாவட்டச் செயலாளர்கள் தங்களது பதவிகளை இழக்கும் கட்டாயச் சூழல் உருவாகியுள்ளது.
இந்த புதிய விதிமுறையின் காரணமாக, கட்சியின் முக்கிய மூத்த தலைவர்களான கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், ரகுபதி, அனிதா ராதாகிருஷ்ணன் போன்றோர் இனி மாவட்டச் செயலாளர் பதவியை வகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பதவியிழப்பு சீனியர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தாலும், அவர்கள் தங்களுக்குரிய அரசியல் செல்வாக்கைத் தக்கவைக்க தீவிரமாக முயன்று வருகின்றனர்.
இதன் விளைவாக, மாவட்டச் செயலாளர் பதவிகளை இழக்கும் சீனியர்கள் அனைவரும் கட்சியில் மாற்றுப் பதவிகளைப் பெற தற்போதே முயற்சிகளைத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணன், திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பதவியை அடைவதற்காக தலைமைக்கு நெருக்கமான வழிகளில் தீவிரமாக காய்களை நகர்த்தி வருவதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
