LATEST NEWS
திக் திக்..! மின்னல் வீசிய மரண பயம்.. பயங்கர சத்தத்துடன் விமானத்தின் மீது பாய்ந்த இடி…அலறிய பயணிகள்…!!
சீனாவின் கிழக்குப் பகுதியில் ‘டால்பின்’ புயல் வீசி வரும் சூழலில், சீனா சவுத்தர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் CZ3209 என்ற விமானம், ஷென்சென் பாவோன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜியாங்சு மாகாணத்தில் உள்ள வூக்ஸி பகுதிக்குப் புறப்படத் தயாராக இருந்தது. அப்போது பலத்த காற்றுடன் கனமழை பெய்தபோதிலும், விமானம் ஓடுபாதைக்குக் கொண்டு வரப்பட்டு பறப்பதற்கு ஆயத்தமானபோது, பயங்கர சத்தத்துடன் விமானத்தின் மீது பேரிடி விழுந்தது. இதனால் கடுமையான அதிர்ச்சியடைந்த பயணிகள் அனைவரும் அச்சத்தில் அலறினர்.
இடி தாக்கிய உடனடியாக, தலைமை விமானி பயணத்தைப் பாதியிலேயே நிறுத்தி, தொழில்நுட்பக் குழுவுடன் இணைந்து விமானத்தை ஆய்வு செய்தார். அந்த ஆய்வில், விமானத்தின் அடிப்பகுதியிலும் வால் பகுதியிலும் மின்னல் தாக்கியதற்கான 20-க்கும் மேற்பட்ட அடையாளங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. பயணிகளின் பாதுகாப்பைக் கருதி, அவர்கள் வேறொரு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் அந்த விமானப் பயணம் சுமார் 4 மணி நேரம் தாமதமானது.
மின்னல் தாக்கியபோதிலும் பெரிய ஆபத்து தவிர்க்கப்பட்டது குறித்துத் தொழில்நுட்பக் குழுவினர் கூறுகையில், விமானத்தின் வெளிப்புறம் அலுமினியக் கலவையால் உருவானதால், மின்னலின் மின்சாரம் வெளிப்புறமாகவே வெளியேறியதாகவும், கேபினுக்குள் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தனர். மேலும், விமானத்தின் மின்னணு சாதனங்கள் அனைத்தும் மின்னல் பாதுகாப்பு வடிவமைப்பு கொண்டவை என்பதால் பயணிகள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அவர்கள் விளக்கமளித்தனர்.
