LATEST NEWS
“விஜய் அல்வா கிண்டி கொடுத்துட்டாரு” குபேரனா நினைச்சவங்களுக்கு வெறும் அலங்கார பதவி தான்… தவெகவில் இணைந்த விஜயபாஸ்கர்களை சாடிய ஆர்.பி.உதயகுமார்..!!
அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் பெரிய வெகுமதிகளை எதிர்பார்த்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததாகவும், ஆனால் தற்போது அவர்கள் அங்குத் தங்கள் தன்மானத்தை இழந்து நிற்பதாகவும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடுமையாகச் சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், கொள்கையையும் தங்களுக்கு வாழ்வளித்த கட்சிக்குச் செய்ய வேண்டிய நன்றியையும் மறந்தவர்களுக்குத் தவெக தலைவர் முதல்வர் விஜய் திருநெல்வேலி அல்வா கிண்டி கொடுத்து ஏமாற்றிவிட்டார் என்று காரசாரமாகக் விமர்சித்துள்ளார்.
ஆளுங்கட்சியில் குபேரனைப் போல வலம் வந்தவர்களுக்குத் தவெகவில் வெறும் அலங்காரப் பதவிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக ஆர்.பி. உதயகுமார் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக, தவெகவில் இணைந்த முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி. சண்முகம் மற்றும் சி. விஜயபாஸ்கர் ஆகியோருக்குக் கட்சியில் முக்கியத்துவம் இல்லாத வெறும் பெயரளவு பதவிகளே கொடுக்கப்பட்டிருப்பதை அவர் தனது வீடியோவில் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளார்.
பெரிய அளவில் அரசியல் அங்கீகாரம் கிடைக்கும் என்று நம்பிச் சென்ற முன்னாள் அமைச்சர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருப்பதாகக் கூறியுள்ள அவர், இந்த நியமனங்கள் மூலம் அவர்களின் சுயமரியாதை பாதிக்கப்பட்டுள்ளது என்றும் விமர்சித்துள்ளார். முதல்வர் விஜய்யின் இந்த அதிரடிப் பதவிப் பங்கீடு, மற்ற கட்சிகளில் இருந்து தவெகவிற்குத் தாவ நினைக்கும் பிற அரசியல்வாதிகளுக்கு ஒரு பெரிய எச்சரிக்கை பாடம் என்றும் ஆர்.பி. உதயகுமார் தனது பதிவில் விவரித்துள்ளார்.
