CINEMA
“வலிகள், கண்ணீர், தூக்கமில்லாத இரவுகள்…” 400 குடும்பங்களின் எதிர்காலத்தை மாற்ற களமிறங்கிய ராஷ்மிகா.. ரசிகர்களை நெகிழ வைத்த திடீர் இன்ஸ்டாகிராம் பதிவு..!!
தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா, 400 ஏழைக் குடும்பங்களைத் தத்தெடுத்து, அவர்களின் அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் தேவைக்காக அடுத்த ஓராண்டுக்குத் தொடர்ந்து உதவ முன்வந்துள்ளார். இந்த உதவியின் மூலம் அக்குடும்பங்கள் மளிகைப் பொருட்களுக்காகச் செலவிடும் தொகையைச் சேமித்து, தங்களின் எதிர்காலத் தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதுவரை தான் செய்து வந்த சமூக உதவிகளைப் பொதுவெளியில் பகிராமல் இருந்த ராஷ்மிகா, பிறருக்கும் இது ஓர் உந்துதலாக அமைய வேண்டும் என்பதற்காகவே தற்போது இன்ஸ்டாகிராமில் மனம் திறந்துள்ளார்.
தான் தற்போது நடித்துள்ள ‘ரணபலி’ திரைப்படத்தில் வரும் ‘ஜெயம்மா’ என்ற கதாபாத்திரத்திற்கும், தனது சொந்த இயல்புக்கும் நெருங்கிய ஒற்றுமை இருப்பதாக ராஷ்மிகா குறிப்பிட்டுள்ளார். நாம் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள் ஏதோ ஒரு வகையில் நம்மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று நெகிழ்ந்துள்ள அவர், பிறருக்கு உதவும் இந்த குணம் ஜெயம்மாவின் இயல்பாகவும், தனது சொந்த இயல்பாகவும் இருப்பதே இந்தத் தத்தெடுப்பு முயற்சிக்கு முக்கியக் காரணம் என்று விளக்கியுள்ளார்.
திரைப்பயணத்தில் தான் சந்தித்த சவால்களைப் பகிர்ந்துகொண்ட ராஷ்மிகா, கடந்த சில ஆண்டுகளாகத் தனக்கு ஏற்பட்ட உறக்கமில்லாத இரவுகள், காயங்கள், போராட்டங்கள், வலிகள் மற்றும் கண்ணீர் என அனைத்துக்கும் ஈடாக இந்த மக்களின் முகத்தில் காணும் சிரிப்பு அமைந்திருப்பதாகக் கூறியுள்ளார். ஒருவரின் வாழ்க்கையில் செய்யப்படும் சிறிய கருணைகூட மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ள ராஷ்மிகாவின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
