LATEST NEWS
“எங்க கட்சிக்கு அந்த பதவியே வேண்டாம் சாமி” ஒரே சண்டையா இருக்கு… ஆதவ் அர்ஜுனாவிடம் சொன்ன திருமாவளவன்… விசிகவில் உச்சக்கட்டப் பரபரப்பு…!!
தவெக கூட்டணி ஆட்சியில் இணைந்துள்ள விசிக-விற்கு வழங்க முன்வந்த தாட்கோ வாரியத் தலைவர் பதவி காரணமாக, அக்கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களிடையே காரசாரமான மோதல் வெடித்துள்ளது. அமைச்சர் பதவியுடன் சேர்த்து கூடுதல் வாரியத் தலைவர் பதவியும் தவெக சார்பில் விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த நியமனம் குறித்து கட்சிக்குள் கடுமையான அதிருப்தியும் போட்டியும் உருவாகியுள்ளது.
தாட்கோ வாரியத் தலைவர் பதவிக்காக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அமைச்சர் வன்னி அரசு மற்றும் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகிய மூவரும் வெவ்வேறு பெயர்களைப் பரிந்துரை செய்துள்ளனர். குறிப்பாக திருமாவளவன், சிந்தனைச் செல்வன் பெயரைப் பரிந்துரைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்கனவே எம்எல்ஏ-வாகவும் முக்கியப் பொறுப்பிலும் உள்ள சிந்தனைச் செல்வனுக்கு மீண்டும் வாய்ப்பளிப்பதா என்று வன்னி அரசு தரப்பில் எதிர்ப்புக் குரல் எழுந்ததால் உட்கட்சிப் பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த மோதலால் மன உளைச்சலுக்கு ஆளான சிந்தனைச் செல்வன், எக்ஸ் தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவிடத் தொடங்கினார். கட்சியினரிடையே வெடித்துள்ள இந்த அதிகாரப் போட்டியை அமைதியாகக் கவனித்து வந்த திருமாவளவன், ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து, “எங்கள் கட்சிக்கு வாரியத் தலைவர் பதவியே வேண்டாம்” என அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம் நேரடியாகத் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.
தலைவரின் இந்த அதிரடி முடிவால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கடுமையான அப்செட்டில் ஆழ்ந்துள்ளனர். முதல்முறையாகக் கூட்டணி ஆட்சியில் பங்கேற்றுள்ள நிலையில், ஆரம்பத்திலேயே எழும் அதிகாரப் போட்டியையும் உட்கட்சி மோதலையும் சமாளிக்க முடியாமல் விசிக தலைவர் திருமாவளவன் தடுமாறி வருவது அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
