LATEST NEWS
தமிழ்நாட்டில பாத்ரூமில் யார் யார் எவ்வளவு நேரம் இருக்கிறாங்க.. அதை கண்காணிக்க ஒரு அமைச்சர் நியமனமா..? தனிப்பட்ட விமர்சனத்தால் அவையில் உதயநிதி ஸ்டாலின் ஆவேச கேள்வி..!!
தமிழக சட்டப்பேரவையில் மின்வாரியத்தில் காணாமல் போனதாகக் கூறப்படும் ஹார்டு டிஸ்க்கள் குறித்த விவாதம், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே கடுமையான காரசார வாக்குவாதமாக வெடித்தது.
விவாதத்தைத் தொடங்கிய முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, மின்வாரிய தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் 18 ஹார்டு டிஸ்க்கள் காணாமல் போனதாகவும், அவற்றில் முக்கிய ஆவணங்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டினார். மேலும், அமைச்சர் 18 எனக் கூறிய நிலையில், உண்மையில் 38 ஹார்டு டிஸ்க்கள் வரை எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகக் கூறி கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய மின்துறை அமைச்சர் நிர்மல்குமார், கடந்த ஐந்து ஆண்டுகளில் மின்வாரியம் சந்தித்த சிக்கல்களை ஒரே வரியில் விளக்கிவிட முடியாது என்றார். தொடர்ந்து பேசிய அவர், 2021-ல் மின்துறை அமைச்சராக இருந்தவரை மறைமுகமாகக் குறிப்பிடும் வகையில் ‘கரூர் கம்பெனி’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்.
அமைச்சரின் இந்த வார்த்தைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். உடனடியாக எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ‘கம்பெனி’ என்ற சொல் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதா என சபாநாயகரிடம் கேள்வி எழுப்பினார். பின்னர், மின்துறை அமைச்சரைக் குறிப்பிடும்போது உதயநிதி தவறுதலாக வேறு வார்த்தையைப் பயன்படுத்திவிட்டு, உடனடியாக ‘மாண்புமிகு எரிசக்தித் துறை அமைச்சர்’ எனத் திருத்திக் கொண்டார்.
இதற்கு பதிலடி தரும் வகையில் அமைச்சர் நிர்மல்குமார் தனிப்பட்ட விமர்சனத்தை முன்வைக்க, அவையில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது. இறுதியில் ‘கம்பெனி’ என்ற வார்த்தையை அவைக்குறிப்பில் இருந்து நீக்க சபாநாயகர் உத்தரவிட்டார். தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், “தமிழ்நாட்டில் பாத்ரூமில் யார் யார் எவ்வளவு நேரம் இருக்கிறார்கள் என்பதைக் கண்காணிக்க ஒரு அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளாரா?” என வினவினார். தவெக மற்றும் திமுக உறுப்பினர்களிடையேயான இந்த மோதலால் சட்டப்பேரவையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
