LATEST NEWS
வழிப்பறி இல்லை… இது கரும்புப் பறி..! தார்பாயை விலக்கி கரும்புகளை ருசித்த காட்டு யானை…! ஈரோடு தேசிய நெடுஞ்சாலையில் அரங்கேறிய சுவாரசிய சம்பவம்..!!!
ஈரோடு மாவட்டம் தாளவாடிப் பகுதியில் இருந்து கரும்புப் பாரம் ஏற்றிக்கொண்டு சத்தியமங்கலம் நோக்கி ஒரு லாரி மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. இந்த லாரி ஆசனூர் அருகே வந்தபோது, சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த ஒற்றை காட்டு யானை திடீரென கரும்பு லாரியை மறித்தது. இதனால் ஆபத்தை உணர்ந்த லாரி ஓட்டுநர் உடனடியாக வாகனத்தை அங்கேயே நிறுத்தினார்.
லாரி நின்றதைத் தொடர்ந்து, அந்த காட்டு யானை லாரியின் மீது மூடப்பட்டிருந்த தார்பாயை தனது தும்பிக்கையால் லாவகமாக விலக்கியது. பின்னர், அதிலிருந்த கரும்புகளை ஒவ்வொன்றாக எடுத்து மிகவும் ருசித்துச் சுவைக்கத் தொடங்கியது. இந்த அசாதாரணமான காட்சியைக் கண்டு அதிர்ச்சியடைந்த மற்ற வாகன ஓட்டிகளும் தங்கள் வாகனங்களை தூரத்திலேயே நிறுத்திக் கொண்டனர். சுமார் 15 நிமிடங்களுக்கும் மேலாக கரும்புகளைத் தின்று தீர்த்த அந்த யானை, அதன் பின்னர் மெதுவாக சாலையை விட்டு விலகி அடர்ந்த காட்டுக்குள் சென்றது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள காட்டு யானைகள், உணவு மற்றும் தண்ணீருக்காக அடிக்கடி இந்த தேசிய நெடுஞ்சாலையோரத்திற்கு வருவது வழக்கமாகிவிட்டது. குறிப்பாக, தாளவாடி மற்றும் ஆசனூர் வழியாக கரும்பு, காய்கறி ஏற்றிச் செல்லும் வாகனங்களைக் குறிவைத்து மறித்து, உணவுகளை நாசப்படுத்துவதால் வாகன ஓட்டிகள் பெரும் அச்சமடைந்துள்ளனர். எனவே, விபத்துகளையும் அசம்பாவிதங்களையும் தவிர்க்க வனத்துறையினர் இப்பகுதியில் தொடர்ந்து தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு, சாலையோர யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
