CINEMA
மதிய உணவுக்கு அப்புறம் வண்டியா? முதலமைச்சர் விஜய்யின் வீடியோவை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்த ப்ளூ சட்டை மாறன்…!இதெல்லாம் ஒரு விளம்பரம்” என அலறவிடும் நெட்டிசன்கள்…!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் யாரும் எதிர்பாராத மாபெரும் எழுச்சியோடு அரியணை ஏறியிருக்கிறது தமிழக வெற்றிக் கழகம். திமுக, அதிமுக ஆகிய இருபெரும் திராவிடக் கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜய், சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வரத் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பிலும் அதிமுக எம்.எல்.ஏ-க்களின் ஆதரவோடு தனது பெரும்பான்மையை தவெக அரசு நிரூபித்துள்ள நிலையில், அக்கட்சியின் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். அதேநேரம், அதிமுகவை அமைச்சரவையில் சேர்க்க விஜய் திட்டமிடுவதாக எழுந்த வதந்திகளுக்கு, “அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை” என தவெக தரப்பு விளக்கமளித்துள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் நம்பிக்கையோடு தெரிவித்துள்ளார்.
ஆட்சியின் ஆரம்ப கட்டத்திலேயே தவெக அரசின் மீது எதிர்க்கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை அடுக்கத் தொடங்கியுள்ளன. கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களையே பெயர் மாற்றி ‘ஸ்டிக்கர்’ ஒட்டி புதிய திட்டம் போல் தவெக அரசு விளம்பரப்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. குறிப்பாக, முதல்வர் விஜய் காலையிலேயே தலைமைச் செயலகத்திற்கு வந்துவிடுகிறார், வீட்டிலிருந்து மதிய உணவு எடுத்து வருகிறார் என்றெல்லாம் வெளியாகும் செய்திகள், வெறும் மக்கள் தொடர்பு (PR) விளம்பரங்கள் மட்டுமே என சகட்டுமேனிக்கு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இத்தகைய சூழலில், தமிழக அரசின் மருத்துவத் துறைக்கு 40 புதிய வாகனங்களை வழங்கும் அரசு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கொடியசைத்துத் தொடக்கி வைத்த முதலமைச்சர் விஜய், திடீரென அந்த வாகனங்களின் தரம் எவ்வாறு உள்ளது என்பதைச் சோதித்துப் பார்ப்பதற்காக, தானே ஒரு வாகனத்தை ஓட்டிப் பார்த்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவத் தொடங்கியதும், தவெகவின் விர்ச்சுவல் வாரியர்ஸ் இணையத்தில் ‘ஃபயர்’ விட்டு தங்களின் தலைவரைப் பாராட்டிப் பதிவிடத் தொடங்கினர்.
மறுபுறம், விஜய்யின் இந்தச் செயலை எதிர்த்தரப்பினர் கடுமையாக ட்ரோல் செய்து வரும் வேளையில், பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது பாணியில் கலாய்த்து எக்ஸ் தளத்தில் பதிவொன்றைப் போட்டுள்ளார். அதில், “தன் கையால் தானே மதிய உணவு சாப்பிட்டதைத் தொடர்ந்து.. தன் கையால் தானே வண்டி ஓட்டினார். வைரலாகும் வீடியோ” என அக்மார்க் கிண்டலுடன் பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட்டைப் பார்த்த நெட்டிசன்களும் நெட்டி முறிக்க, ப்ளூ சட்டை மாறனின் இந்த நக்கல் பதிவு தற்போது சோஷியல் மீடியாவில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.
